பள்ளி மாணவர்களுக்கு எரிசக்தி சேமிப்பு : விழிப்புணர்வு ஓவிய போட்டி நடத்த உத்தரவு
பள்ளி மாணவர்களுக்கு, எரிசக்தி சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஓவியப்போட்டி நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் சார்பில் தேசிய அளவில் எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மாவட்ட வாரியாக 4,5,6 மற்றும் 7,8, 9ம் வகுப்பு மாணவர்களை ஏ, பி என இரு பிரிவுகளாக பிரித்து போட்டிகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தர விட்டுள்ளது. பள்ளி அளவில் சிறந்ததாக தேர்வு செய்யப்படும் இரு படைப்புகளை, சென்னையில் உள்ள எரிசக்தி துறை அதிகாரி களுக்கு, செப்., 30க்குள் கிடைக்கும்படி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வாசு கூறுகையில், “பள்ளி அளவில் தேர்வு செய்யப்படும் சிறந்த இரண்டு படைப்புகள் தலைமை ஆசிரியர்கள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இதில் தேர்வாகும் மாணவர்கள் மாநில போட்டிகளிலும், அதனை தொடர்ந்து தேசிய போட்டிகளிலும் பங்கேற்க உள்ளனர். மாநில போட்டிகளில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும், இரண்டாமிடத்திற்கு 15 ஆயிரம் ரூபாயும், மூன்றாமிடத்திற்கு 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படவுள்ளன. ஆறுதல் பரிசாக 10 பேருக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப் படவுள்ளது. தேசிய அளவில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும், ”என்றார்.