தமிழில் நூலக படிப்பு துவங்க கோரிக்கை
கல்லுாரி, பல்கலைகள், நுாலக பட்டப் படிப்புகளை, தமிழில் நடத்துவதில் அக்கறை காட்டாததால், தமிழில் நுாலக பட்டம் பெற்றவர் எண்ணிக்கை குறைந்துள்ளது.
அரசின் வேலைவாய்ப்பு விதிகளின் படி, தமிழ் வழியில் படித்தால், 20 சதவீத முன்னுரிமை வழங்கலாம். ஆனால், நுாலக படிப்பு தமிழில் இல்லாததால், இந்த முன்னுரிமை வழங்கப்படவில்லை. தற்போதைய நிலை யில், தமிழகத்தில், தஞ்சை தமிழ் பல்கலையில் மட்டுமே நுாலக பட்டம் மற்றும் மேற்படிப்புகள், தமிழில் நடத்தப்படுகின்றன. மற்ற மாவட்ட மாணவர்களுக்கு, இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. செம்மொழி அந்தஸ்தும், கலாசார வரலாற்றையும் கொண்ட, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு, அதிக அளவில் ஆராய்ச்சிகள் தேவையுள்ளன; ஆராய்ச்சிக்கான புத்தகங்கள், ஆவணங்களை பாதுகாக்க, நுாலக பராமரிப்பு மிகவும் முக்கியமானது.
தற்போதைய நிலையில், பெரும்பாலான இடங்களில், ஆங்கிலம் படித்த நுாலகர்கள், தமிழ் புத்தகங்களை பராமரிப்பதால், ஆராய்ச்சி மாணவர்களுக்கு, நுாலகத்தில் சரியான புத்தகம் கிடைப்பதில் சிரமம் உள்ளது. இந்நிலையை மாற்ற, 'அனைத்து கல்லுாரி மற்றும் பல்கலையில், தமிழில் நுாலக படிப்பு கொண்டு வர வேண்டும்' என, தமிழ்நாடு தொழில்முறை நுாலகர்கள் சங்க செயலர் எஸ்.மணிகண்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.