தொலைநிலைக் கல்வி நிறுவனங்களுக்கு இனி ஒரே பாடத் திட்டம்
தமிழகத்தில உள்ள அனைத்து தொலைநிலை கல்வி நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மூலம் ஒரே வகையான பாடத் திட்டம் தயாரிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பு:-
உயர் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் தொலைநிலைக் கல்வி முறைப் படிப்புகளுக்கு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைகழகத்தால் ரூ.5 கோடியில் ஒரே வகையான தரமான பாடத் திட்டங்கள் தயாரிக்கப்படும்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிக்காக வாங்கப்படும் சாதனங்களைப் பழுதுநீக்க ரூ.2.02 கோடியில் மையம், ரூ.2.42 கோடியில் புதிய உணவுக் கூடம், ரூ. 2.58 கோடியில் பொதுக் கணினி மையம், ரூ. 8 கோடியில் மாணவிகளுக்கான தங்கும் விடுதி, ரூ. 13.86 கோடியில் புதிய அறிவியல் பல கட்டடம், ரூ. 36.50 லட்சத்தில் புதிய வங்கிக் கட்டடம் ரூ. 1.50 கோடியில் புதிய உள் விளையாட்டு அரங்கம் ஆகியன அமைக்கப்படும்.
மேலும், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் தகவல் தொடர்புத் திறனை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் சார்பில் ரூ.12.50 லட்சத்தில் "உங்கள் காலடித் தடத்தில் உலகம்' எனும் ஆங்கிலப் புத்தகம் வழங்கப்படும் என்பன உள்பட 16 அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.