4 வயதில் ஒன்பதாம் வகுப்பு’ : குழந்தையின் அதிசய அறிவாற்றல்
உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவை சேர்ந்த, தேஜ் பகதூரி என்பவரின் மகள் சுஷ்மா (15), தனது அறிவுக் கூர்மையால் சிறுவயதியிலேயே பட்டதாரியாகி, நுண்ணுயிரியில் தொடர்பான முனைவர் பட்டத்துக்கு படித்து வருகிறார்.
இவரது தம்பியான ஷைலேந்திரா என்பவர் ஒன்பது வயதில் 12-வது வகுப்பு தேர்வில் தேர்ச்சியடைந்துள்ள நிலையில், தேஜ் பகதூரின் கடைசி மகளான நான்கு வயது அனன்யாவுக்கு மழலைப் பருவத்திலேயே தனது அக்கா மற்றும் அண்ணனின் புத்தகங்களை எடுத்து படித்ததால், அவர் நேரடியாக ஒன்பதாம் வகுப்பில் சேர்வதற்கான நுழைவு தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரியின் ஒப்புதலுக்காக பள்ளி நிர்வாகம் காத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதே பள்ளியில் தனது ஒன்பதாம் வகுப்பில் அனன்யாவின் அக்காவான சுஷ்மா சேர்ந்தபோது அவருக்கு வயது ஐந்து என்பது குறிப்பிடத்தக்கது. தனது அக்கா, அண்ணனைவிட அதிக அறிவாற்றலுடன் காணப்படும் அனன்யா, ராமாயணத்தின் பெரும்பகுதியை படித்து, மனப்பாடம் செய்து வைத்துள்ளதாக அவரது தாயார் பெருமிதத்துடன் கூறுகிறார்.
தனது பிள்ளைகளின் அறிவாற்றல் தொடர்பான செய்திகள் வெளியாக தொடங்கிய பிறகுதான் தேஜ் பகதூருக்கு பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் வேலை கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
என் பிள்ளைகளுக்கு நான் எவ்வித சிறப்பு டியூஷனுக்கும் ஏற்பாடு செய்தது இல்லை. அதற்கான வசதியும் எனக்கு கிடையாது. இறைவன் அருளிய அறிவாற்றலை கொண்டு எங்கள் வம்சத்துக்கே இவர்கள் பெருமை தேடி தந்திருக்கிறார்கள் என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார், தேஜ் பகதூர்.