மாற்றுத்திறனாளி ஆசிரியருக்கு இடமாறுதலில் முன்னுரிமை : உயர்நீதிமன்றம் உத்தரவு
இடமாறுதலில் மாற்றுத்திறனாளி ஆசிரியர் சொந்த மாவட்டத்திற்கு மாறுதல் கோரினால் முன்னுரிமை அளிக்க வேண்டும் என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி புளியங்குடி கண்ணன். மாற்றுத்திறனாளியான இவர், சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிகிறார். திருநெல்வேலி செவல்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு இடமாறுதல் கோரி அரசுக்கு விண்ணப்பித்தார். நடவடிக்கை கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கண்ணன் மனு செய்தார்.
நீதிபதி டி.ராஜா விசாரித்தார்.
மனுதாரர் வழக்கறிஞர் அறிவழகன்: பணி நியமனத்தின்போது, சொந்த ஊர் பள்ளியில் காலி இடம் இல்லை என அரசுத் தரப்பில் தெரிவித்தனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் நரசிங்கநல்லுார் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 2009 ல் மனுதாரர் நியமிக்கப்பட்டார். மனுதாரர் 2015 ல் சொந்த மாவட்டத்திற்கு இடமாறுதல் கோரினார். காலி இடம் இல்லை என அரசுத் தரப்பில் தெரிவித்தனர். ஆனால் 13 பேருக்கு இடமாறுதல் வழங்கியுள்ளனர். மனுதாரரின் பரிதாப நிலையை கருத்தில் கொள்ளவில்லை என்றார்.
அரசு வழக்கறிஞர் ஆயிரம் செல்வகுமார்: தற்போது இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது. செவல்குளம் பள்ளியில் ஒரு இடம் காலியாக உள்ளது என்றார்.
நீதிபதி: மனுதாரருக்கு ஊனத்தின் தன்மை 80 சதவீதம் உள்ளது. மனுதாரர் இரண்டாவது முறையாக இந்நீதிமன்றத்தின் கதவை தட்டியுள்ளார். இதன் மூலமாவது தன கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்ற நம்பிக்கையில் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இடமாறுதலில் மாற்றுத்திறனாளி ஆசிரியருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மனுதாரருக்கு செவல்குளம் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு இடமாறுதல் வழங்க துவக்கக் கல்வி இயக்குனர், திருநெல்வேலி மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர் ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார்.