ஐ.க்யூ.,வில் இந்திய மாணவன் டாப்!
ஐன்ஸ்டீனை விட மார்க் அதிகம்! பிரிட்டனின் இல்போர்டு நகரிலுள்ள புல்வுட் ஆரம்பப் பள்ளியில் படிக்கும், 10 வயது மாணவனான துருவ் தலாதி, அறிவுத்திறனை சோதிக்கும், 'ஐ.க்யூ' போட்டியில், 162 மதிப்பெண்கள் பெற்று உலக சாதனை படைத்திருக்கிறான். இது, பிரபல விஞ்ஞானிகளான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகிய இருவரது ஐ.க்யூ., மதிப்பெண்களான, 160ஐ விட, 2 மதிப்பெண்கள் அதிகம்! 'ஐ.க்யூ., சோதனை அத்தனை கடினமாக இருக்கவில்லை. குறிப்பிட்ட அவகாசத்திற்குள் முடிப்பது தான் சவாலாக இருந்தது' என்று, ஊடக பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறான் சிறுவன் துருவ். உலகப் புகழ் பெற்ற, 'மென்சா' என்ற அமைப்பு நடத்தும் இந்த ஐ.க்யூ., போட்டிக்கு சிரத்தையாக தயார் செய்யாமல் கிரிக்கெட், டென்னிஸ் போட்டிகளிலும் கலந்து கொண்டிருந்திருக்கிறான். இத்தனைக்கு இந்த விளையாட்டு போட்டிகள் எல்லாம் மாவட்டங்களுக்கு இடையிலான போட்டிகள்.
இதனால், வங்கி பணியாளராக இருக்கும் துருவின் அப்பாவுக்கும், அம்மாவுக்கும், துருவின் வெற்றி பெருத்த ஆச்சரியத்தை தந்துள்ளது. பெற்றோர் இருவரும் துருவின் திறமையை ஊக்குவிக்க இனிமேல் தயாராக இருப்பதாக உறுதி பூண்டுள்ளனர். எதிர்பார்த்தபடியே துருவுக்கு அறிவியலில் தான் ஆர்வம் அதிகம். இதனால், பெரியவன் ஆனதும் ரோபோ விஞ்ஞானியாக ஆவது தான் தன் கனவு என்று துருவ் தெரிவித்துள்ளான். கடந்த, 1946 முதல் நடத்தப்பட்டு வரும் மென்சா ஐ.க்யூ., தேர்வுகளில், பெரியவர்கள் அதிகபட்சம் பெற்ற மதிப்பெண்கள், 161.
பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளோர் இதுவரை, 162 மதிப்பெண்ணை தாண்டியதில்லை. உலகெங்கும் உள்ள, 100 நாடுகளைச் சேர்ந்த, ஒரு லட்சத்து, 20 ஆயிரம் பேர், மென்சா சங்கத்தில் உறுப்பினர்கள். கடந்த ஆண்டு, கேரளாவிலிருந்து பிரிட்டனில் குடியேறிய குடும்பத்தைச் சேர்ந்த லிடியா செபாஸ்டியன் என்ற, 12 வயது சிறுமி, 162 ஐ.க்யூ., மதிப்பெண்கள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே வித்தியாசம் லிடியாவை விட துருவ் இரண்டு வயசு சின்னப் பையன். அதனாலேயே அவனுக்கு அதிக கவனம் கிடைத்திருக்கிறது.