பயிர் பதனீட்டு படிப்பை தவிர்க்கும் தமிழக மாணவர்கள்
காவிரி டெல்டா பகுதியான திருவாரூரில், தஞ்சை கூட்டுறவு விற்பனை அமைப்பின் சார்பில், நவீன அரிசி ஆலை, 1967ல் துவங்கப்பட்டது. இந்த ஆலை, 1972ல் நெல் ஆராய்ச்சி மையமாக மாற்றப்பட்டது. அதன்பின், மத்திய அரசின் மூலம் பயிர் பதனீட்டு உயர் தொழில்நுட்ப கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாக, 2008ல் மாற்றப்பட்டது. இந்த நிறுவனம், மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில், கோவை வேளாண் பல்கலையின் இணைப்பில், ஐ.ஐ.டி.,க்கு இணையாக செயல்படுகிறது. இங்கு, நான்கு ஆண்டு பி.டெக்., படிப்பில், உணவு பதப்படுத்தும் பாடப்பிரிவில், ஆண்டுதோறும், 60 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஜே.இ.இ., நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, இந்த நிறுவனத்தில் படிக்க முடியும். ஆனால், ஜே.இ.இ., தேர்ச்சி பெற்ற மாணவர்கள், இந்த நிறுவனத்தில் சேர ஆர்வம் காட்டுவதில்லை. இந்த ஆண்டு, 60 இடங்களுக்கு நடந்த, 'ஆன்லைன்' கவுன்சிலிங்கில், 12 பேர் மட்டுமே சேர்ந்தனர். பின், உடனடி மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டது. அதில், 137 பேர் பதிவு செய்தனர். அவர்களில், 35 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்; மற்றவர்கள், கேரளா மற்றும் ஆந்திர மாநிலத்தவர். இறுதியில், 57 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதிலும், 15 பேர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்கள்; மற்றவர், வெளிமாநிலத்தவர்.
நெற்களஞ்சியமான தஞ்சையில், வேளாண் தொழில் சார்ந்த படிப்பில், தமிழக மாணவர்கள் சேர முன்வராதது, கல்வியாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.