கல்லூரி வளாகங்களில் கண்காணிப்பு கேமரா
'ராகிங்' நடவடிக்கைகளை தடுக்க, கல்லுாரி வளாகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய கல்வி ஆண்டு துவங்கியதை அடுத்து, அனைத்து கல்வி நிறுவனங்களிலும் வகுப்புகள் துவங்கி உள்ளன. கல்லுாரிகளிலும், விடுதிகளிலும், ராகிங் நடவடிக்கைகள் இருக்கக் கூடாது என, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு, பல்கலை மானியக் குழுவான யூ.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது. கல்லுாரி வளாகங்களில், ராகிங் தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய, 'பேனர்' வைக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு, ராகிங் குற்றத்துக்கான தண்டனை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கல்லுாரி வளாகங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். பேராசிரியர்கள் மற்றும் ராகிங் தடுப்பு குழுவினர் ரோந்து வர வேண்டும். வகுப்பறை, விளையாட்டு மைதானம், விடுதி அறைகள், கேன்டீன்களில், அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.