தொலைநிலை கல்வியில் ஒரே பாடத் திட்டம்
''தொலைநிலைக் கல்வி படிப்புகளுக்கு, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை சார்பில், ஒரே பாடத்திட்டம் உருவாக்கப்படும்,'' என, உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
சட்டசபையில், உயர்கல்வித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து, அமைச்சர் கே.பி.அன்பழகன், நேற்று வெளியிட்ட அறிவிப்புகள்:
சேலம், பெரியார் பல்கலையில், ஆராய்ச்சி சாதனங்கள் பழுது நீக்குதல்; உணவுக்கூடம், பொது கணினி மையம் அமைத்தல்; மூன்று தளங்களுடன் கூடிய புதிய மாணவியர் விடுதி; 1.5 கோடி ரூபாயில், புதிய உள் விளையாட்டு அரங்கம் மற்றும், 13.86 கோடியில், புதிய அறிவியல் கட்டடம் உள்ளிட்ட பணிகள், 29.24 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும்.
கொடைக்கானல், அன்னை தெரசா மகளிர் பல்கலை ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம், கோவையில், 1 கோடி ரூபாயில் அமைக்கப்படும். மதுரையில் செயல்படும் இப்பல்கலை ஆய்வு மையத்தில், 1.5 கோடி ரூபாயில் பல்நோக்கு கட்டடம் கட்டப்படும்.
கோவை பாரதியார் பல்கலையில், 50 லட்சம் ரூபாயில், பேரழிவு மீட்பு மேலாண்மை இணையதள மையம்; 10 லட்சம் ரூபாயில், திறன் வளர்த்தல் மையம் உருவாக்கப்படும்.
திருச்சி, பாரதிதாசன் பல்கலையில் செவி, பேச்சுத்திறன் குறைந்த மாணவர்களுக்கு, கணினி பயன்பாட்டில் சிறப்பு இளங்கலை பாடப்பரிவு துவங்கப்படும்.
திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கு, 9.6 கோடி ரூபாயில், புதிய கட்டடங்கள் மற்றும் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அரசு கலை, அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கு, மொழி பரிமாற்ற மேம்பாடு குறித்த இடைவெளி நிரப்பு பயிற்சிக்கு, 12.50 லட்சம் ரூபாயில் புத்தகம் வழங்கப்படும்.
பல்கலை வழங்கும் தொலைநிலைக் கல்வி முறை படிப்புகள், பல்வேறு வகைகளில் உள்ளன. அவற்றிற்கு, 5 கோடி ரூபாயில், ஒரே பாடத்திட்டம் தயாரிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.