கலாசாரம் கற்று கொள்ள வந்த துபாய் மாணவர்கள்
துபாய், லண்டன் வாழ் நகரத்தாரின் வாரிசுகள், அவர்களின் வழிபாடு மற்றும் கலாச்சார முறைகளை அறிந்து கொள்ள காரைக்குடிக்கு வந்தனர். நாட்டுக்கோட்டை நகரத்தார்கள், தங்களின் வாரிசுகள் தங்களின் பழக்க வழக்கங்களை விட்டு விலக கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர்கள். அதன் அடிப்படையில் துபாயில் பயிலும் நகரத்தாரின் வாரிசுகள் 20 பேர், லண்டனில் பயிலும் மாணவர்கள் 5 பேர் என 25 பேர் நகரத்தாரின் பாரம்பரியங்களை காணும் பொருட்டு காரைக்குடிக்கு நேற்று வந்தனர். அவர்கள் நகரத்தாரின் ஒன்பது கோயில்களையும், அதன் வழிபாடு முறைகளையும்,வடிவமைத்திருக்கும் கலை பொக்கிஷங்களையும் கண்டு களித்தனர். நேற்று கோவிலுார் மடாலயத்தில் உள்ள, செட்டிநாடு அரங்கை பார்வையிட்டனர். குமரப்பன் வரவேற்றார். ராமனாதன் ரமேஷ்: துபாயில் நகரத்தார் பிசினஸ் இன்ஷியேட்டிவ் குரூப் (என்பிக்) என்ற அமைப்பை துவக்கி நகரத்தார் பாரம்பரியம் குறித்த நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். 2 ஆண்டுக்கு ஒரு முறை இதில் இணைந்துள்ள அனைவரும் ஓரிடத்தில் கூடுவோம். 2013-ல் சிங்கப்பூரிலும், 2015ல் கோவையிலும் என்பிக்' கூட்டமைப்பு கூட்டம் நடந்தது. துபாயில் படிக்கும் நகரத்தார் குழந்தைகள், அவர்களின் பழக்க வழக்கங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இங்கு அழைத்து வந்துள்ளோம்.
தான் யார். தன்னுடைய பழக்க வழக்கங்கள் என்ன. தன்னுடைய சமுதாய கடமை என்ன என்பதை உணர்த்துவதற்காகத்தான் இந்த நிகழ்வு. ஏற்கனவே கோட்டையூர் வள்ளி ஆச்சி ஏற்பாட்டின் பேரில் ஏராளமான மாணவர்கள் இங்கு வந்துள்ளனர். தற்போது சிவகங்கை சோழபுரத்தில் தங்கியிருந்து செட்டிநாட்டு பகுதிகளை சுற்றி பார்த்து வருகிறோம். தினந்தோறும் மாலையில் செட்டிநாடு சிறப்பு குறித்த சொற்பொழிவு நடக்கிறது.
மாணவி விசாலாட்சி, துபாய்: நகரத்தார் பழக்க வழக்கங்களின் மூலம், நாமும் ஒரு தொழில் செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொண்டோம். நம்முடைய கோயில் மற்றும் வீடுகளை இத்தனை ஆண்டுகள் பராமரித்து வந்துள்ளனர்.
அவற்றை தொடர்ந்து என்னாலும் பராமரிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளது. படிப்போடு நின்று விடாமல், நம் வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்கள், நாகரிகம் ஆகியவற்றை கற்று கொண்டதன் மூலம், சமூகத்தில் நெறி பிறழாது வாழ முடியும் என்பதை உணர்ந்துள்ளோம், என்றார்.