அரசாணை இருந்தும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க இயலாத அரசு கல்லூரிகள்
மாணவர் சேர்க்கைக்கான இடங்களை அதிகரித்துக்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டபோதும், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அரசு கலை-அறிவியல் கல்லூரிகள் நிகழாண்டில் இந்த இடங்களை அதிகரிக்க முடியாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், பல ஆயிரம் மாணவர்கள் கல்லூரிகளில் தங்களுக்கு இடம் கிடைக்காமல் ஏமாற்றம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
கல்வித் தரம் குறைந்தது, மென்பொருள் நிறுவனங்கள் தமிழக பொறியியல் கல்லூரிகளில் வளாகத் தேர்வுக்கு வருவதைக் குறைத்தது, நிறுவனங்களின் ஊதியக் குறைப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், 2011-ஆம் ஆண்டு முதல் பொறியியல் படிப்புகள் மீது மாணவர்களின் ஆர்வம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. அதேசமயம், கலை-அறிவியல் படிப்புகள் மீதான மாணவர்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளாக கலை-அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், 2016-17 கல்வியாண்டில், கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விண்ணப்ப விநியோகம் அதிகரித்தது.
குறிப்பாக, சென்னை காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் 2014-15 கல்வியாண்டில் 13 ஆயிரம் விண்ணப்பங்களும், 2015-16இல் 14,300 விண்ணப்பங்களும் விநியோகமாகின. ஆனால், நிகழாண்டில் இது 15 ஆயிரத்தை எட்டியுள்ளது.
இதேபோன்று, சென்னை ராணி மேரி கல்லூரியில் 2014-15இல் 12 ஆயிரம் விண்ணப்பங்களும், கடந்த கல்வியாண்டில் 13,500 விண்ணப்பங்களும், நிகழாண்டில் 14,500 விண்ணப்பங்களும் விநியோகமாகின.
சென்னை மாநிலக் கல்லூரியைப் பொருத்தவரை கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் 2 ஆயிரம் விண்ணப்பங்கள் கூடுதலாக விநியோகமாகியுள்ளன. பெரும்பாலான அரசுக் கல்லூரிகளில் இதே நிலைதான்.
கலை- அறிவியல் படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்ததைத் தொடர்ந்து, அரசுக் கல்லூரிகளில் 20 சதவீத அளவுக்கும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீத அளவுக்கும், சுயநிதி கல்லூரிகளில் 10 சதவீத அளவுக்கும் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரித்துக் கொள்ள சென்னைப் பல்கலைக்கழகம் அனுமதி அளித்தது.
அரசாணை: இதுதொடர்பாக, தமிழக அரசு ஜூலை 11-ஆம் தேதி அரசாணை (அரசாணை எண்.86) ஒன்றை பிறப்பித்தது. அதில், "அரசு கலை -அறிவியல் கல்லூரிகளில் 2016-17 கல்வியாண்டில் அறிவியல் சார்ந்த பாடப் பிரிவுகளில் மாணவர்கள் எண்ணிக்கையை 60 இடங்கள் என்ற அளவிலும், கலை சார்ந்த பாடப் பிரிவுகளில் 100 இடங்கள் என்ற அளவிலும் உயர்த்திக் கொள்ளலாம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு வசதிகள்: இது அரசுக் கல்லூரிகளின் நிர்வாகம், மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இருப்பினும், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், பெரும்பாலான அரசுக் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
சில அரசு கல்லூரிகளில் இடவசதிகளும், இருக்கை வசதிகளும் இல்லாத சூழலில், இந்த அரசாணைப்படி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என பஞ்சாயத்து நிர்வாகிகள் சார்பில் நிர்பந்தம் அளிக்கப்படுவதாக தெரிகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக பொதுச் செயலாளர் தாமோதரன் கூறியது:
அரசுக் கல்லூரிகளின் ஆய்வகங்களில் தேவையான உபகரணங்கள் கிடையாது. 1,000 ஆய்வக உதவியாளர் பணியிடங்களும், 1,000 அலுவலக உதவியாளர் பணியிடங்களும் காலியாக உள்ளன. மேலும் 1,800 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டியுள்ளது.
சென்னையைத் தவிர்த்த பிற மாவட்டங்களில் அமைந்துள்ள அரசுக் கல்லூரிகளில் கட்டட வசதிகளும் பெரிய அளவில் கிடையாது. குறிப்பாக, பொன்னேரி அரசுக் கல்லூரி உள்பட மேலும் சில கல்லூரிகளில் வகுப்பறையில் 24 பேரை மட்டுமே அமர வைக்க முடியும். ஆனால், அரசாணைப்படி சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என அந்தந்தப் பகுதி உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகள் கல்லூரி முதல்வர்களை நிர்பந்தித்து வருகின்றனர்.
அரசு கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் மாணவர் சேர்க்கையை உயர்த்துவது சாத்தியமில்லை. எனவே, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் மாணவர்களின் ஆர்வத்தைப் பூர்த்தி செய்யும் வகையில், அனைத்து அரசு கலை -அறிவியல் கல்லூரிகளிலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டும் என்றார் அவர்.