புதிய கல்வி கொள்கைக்கு எதிரான போராட்டத்தில் திமுக பங்கேற்கும்
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து, திராவிடர் கழகம் நடத்தும் போராட்டத்தில் திமுகவினரும் பங்கேற்பர் என்று அந்தக் கட்சித் தலைவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:-
மாநில உரிமைகளை ஆக்கிரமத்துப் பறித்துகொண்ட அதிகாரத்தால் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மத்திய பாஜக அரசு தனது மறைமுகத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, அதை மாநிலங்களின் மீது திணிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இந்த முயற்சி அரசியல் சட்டத்தின் முகவுரையில் சொல்லப்பட்ட சோஷலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு என்ற மிக உன்னதமான கருத்தாக்கத்தை மறுப்பதாக உள்ளது.
பன்முகத்தன்மை என்பதும் வேற்றுமையில் ஒற்றுமை என்பதும் இந்திய திருநாட்டின் வலிமை மிக்க தூண்களாகும்.
பன்முகத் தன்மையைப் பாழ்படுத்தி, வேற்றுமையில் ஒற்றுமையை விழலுக்கு இறைத்த நீராக்குவதுதான் சமத்துவம், சமூக நீதி, சிறுபான்மையினரின் பாதுகாப்பு, மாநிலங்களைப் மதித்துப் போற்றும் உண்மையான கூட்டாட்சித் தத்துவம் போன்ற ஆக்கப்பூர்வமான அம்சங்களை முற்றிலுமாகப் புறக்கணிப்பதே புதிய கல்விக் கொள்கை ஆகும்.
அப்படிப்பட்ட இந்தக் கொள்கை ஏற்கப்பட்டு நடைமுறைக்கு வருமாயின், மாணவர்களுக்கு இடையே பாகுபாடு, விரக்தி மனப்பான்மை, ஆசிரியர்களுக்கு இடையே சலிப்புணர்வு படிந்து, குலக் கல்வி மீண்டும் உயிரூட்டம் பெறும்.
இந்தியக் கல்வியின் கதவுகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அகலத் திறந்து அனுமதிக்கப்படும். இதனால், கல்வியில் மீள முடியாத பெரும் பின்னடைவு ஏற்பட்டு விடும். என திமுக தலைவர் தெரிவித்தார்