வீடு, மனை விற்பனைக்கு ஆதார் எண் கட்டாயம்
ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையை முறைப்படுத்த, மத்திய அரசு, புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி, வீடு, மனை பரிமாற்றத்தில் ஈடுபடுவோர் பயன்படுத்துவதற்காக, வரைவு விற்பனை ஒப்பந்த ஆவணத்தை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.
மொத்தம், 19 பக்கங்கள் உடைய இந்த வரைவு விற்பனை ஒப்பந்தத்தில் விற்பவரும், வாங்குபவரும் கடைப்பிடிக்க வேண்டிய, 12 நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டு உள்ளன.
அதாவது, வீடு, மனை விற்பனை செய்யும் நிறுவனம், சி.ஐ.என்., எனப்படும், நிறுவன பதிவு எண், பான் எண், நிறுவனம் சார்பில் கையெழுத்திடும் நபரின் ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களை அளிக்க வேண்டும். இதேபோன்று, வீடு, மனை வாங்குபவர் தரப்பிலும் பான் எண், ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களை அளிக்க வேண்டும்.
அடுக்குமாடி குடியிருப்பு எனில், வீடு குறித்த என்னென்ன விபரங்கள் இருக்க வேண்டும், மனை விற்பனையில், என்னென்ன விபரங்கள் இருக்க வேண்டும் என்பதும், விற்பவர் மற்றும் வாங்குபவருக்கான கடமைகள், வீடு, மனை ஒப்படைப்புக்கான நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளும் கூறப்பட்டுள்ளன. இது குறித்து பொது மக்களும், கட்டுமான நிறுவனங்களும், தங்கள் கருத்துகளை ஆக., 17க்குள் தெரிவிக்க வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.