பாடப்புத்தகம் அச்சடிக்கும் பணி: டெண்டர் காலாவதி?
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும், இலவச பாடப் புத்தகங்களை, தனியார் அச்சகங்கள் மூலம் அச்சடித்து, பாடநுால் கழகம் வழங்கி வருகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பள்ளி பாடப் புத்தகங்கள் அச்சிட, தமிழ்நாடு பாடநுால் கழகம், பிப்., 28ல், 'டெண்டர்' அறிவித்தது. மார்ச், 30ல், டெண்டர் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.
ஆனால், அன்றைய தினம், டெண்டர் திறக்கப்படவில்லை. இதற்கான விண்ணப்பங்கள், 120 நாட்களில், அதாவது, ஜூலை, 28ல் காலாவதி ஆனதையும், பாடநுால் கழகம் மறந்து விட்டது. அச்சகர்கள், அடுத்த டெண்டர் எப்போது என கேட்ட போது தான், விண்ணப்பங்கள் காலாவதியானதை அதிகாரிகள் அறிந்துள்ளனர். இதையடுத்து, விண்ணப்பதாரர்களுக்கு, அவசரமாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், 'டெண்டர் விண்ணப்பங்கள் செல்லத்தக்க தேதியை, 60 நாட்கள் நீட்டிக்க உள்ளோம். அதற்கு ஒப்புதல் கடிதம் அனுப்ப வேண்டும்' என, பாடநுால் கழக மேலாண் இயக்குனர் மைதிலி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அச்சகர்கள் கூறுகையில், 'டெண்டர் அறிவிக்கப்பட்ட கால அவகாசத்தில், மூலப்பொருட்களுக்கு என்ன சந்தை விலையோ, அதற்கு ஏற்ப, விண்ணப்பத்தில் விலையை குறிப்பிடுவோம். இன்னும், இரு மாதங்கள் தேவை என்பதால் விலை மாறுபடும். காலாவதியான விண்ணப்பத்திற்கு பதில், புதிய டெண்டர் அறிவிப்பை வெளியிட வேண்டும்' என்றனர்.
10 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கும் அபாயம் : பாடப் புத்தகங்கள் மாநில மொழிகளில் அச்சிடப்படுவதால், மொழி புரியும் வகையில், உள்ளூர் அச்சகர்களுக்கே, ஒவ்வொரு மாநிலமும் அனுமதி அளிக்கிறது. இங்கு, ஆந்திரா, கர்நாடகா அச்சகர்களை அனுமதிப்பதால், புத்தகங்களில் பல பிழைகள் இருந்தன. இந்த முறையும், 50 வெளிமாநில அச்சகங்கள் விண்ணப்பித்துள்ளன.
அதனால், உள்ளூர் அச்சகங்களுக்கு வாய்ப்பு குறைந்து, சென்னை மற்றும் சிவகாசியிலும் அச்சகங்களை நம்பியுள்ள, 10 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த, 50 ஆயிரம் பேரின் வாழ்வாதாரம் பாதிப்படையும் அபாயத்தில் உள்ளதாக, அச்சகர்கள் கவலை அடைந்துள்ளனர்.