10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தத்தில் விரைவில் மாற்றம்
வ்வொரு ஆண்டும், 10 லட்சம் மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகின்றனர். இவர்களில், 80 சதவீதத்துக்கும் மேலானவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர். மாநில, மாவட்ட அளவிலும், அதிக மதிப்பெண் பெற்று, முதல் மூன்று, 'ரேங்க்'களை பெறுகின்றனர்.
ஆனால், இதுபோன்று ரேங்க் பெறும் மாணவ, மாணவியர் உட்பட, அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பலர், பிளஸ் 1 பாடங்களை படிப்பதில் திணறுவது தெரியவந்து உள்ளது.
குறிப்பாக, கணிதம் மற்றும் உயிரியலில், மாணவர்களின் கற்கும் திறன் மிகவும் மந்தமாக உள்ளதாக, பள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: பத்தாம் வகுப்பு முடித்து, பிளஸ் 1 சேரும் மாணவர்களில் பலர், அடிப்படை கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளனர். வெறும் மனப்பாடமாக படித்து விட்டு வருவதால், பிளஸ் 1ல் திணறுகின்றனர். இதற்கு, 10ம் வகுப்பு தேர்வில் விடைத்தாள் திருத்தும் முறை தான் முக்கிய காரணம். தேர்ச்சி விகிதத்தை அதிகமாக காட்ட, அதிகாரிகள் உத்தரவிடுவதால், ஆசிரியர்கள், தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப, மதிப்பெண்களை வாரி வழங்குகின்றனர். மேலும், விடைத்தாளுக்கு மறுமதிப்பீடும் இல்லை என்பதால், ஆசிரியர்கள் எந்த தடையும் இல்லாமல், திருத்தும் சூழல் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, தேர்வுத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, '10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் முறையில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்த வகையான மாற்றம் என்பதை, ஆசிரியர்கள், வல்லுனர்கள் கொண்ட குழு முடிவு செய்யும்' என்றனர்.