நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை தேசிய தகுதிகாண் பொது நுழைவுத் தேர்வு ("நீட்') மூலம் நிரப்ப வகை செய்யும் இரு சட்டத் திருத்த மசோதாக்கள் மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேறின.
ஏற்கெனவே மக்களவையில் அந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், மாநிலங்களவையிலும் அவற்றுக்கு தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது. இதையடுத்து அடுத்த ஆண்டு முதல் மருத்துவப் படிப்புகளுக்கு நாடு முழுவதும் பொதுவான நுழைவுத் தேர்வை நடத்தும் முறை அமலாக உள்ளது. தமிழக அரசின் பலத்த எதிர்ப்புக்கு நடுவிலும், இந்த மசோதாக்களை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசு தாக்கல் செய்து, நிறைவேற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தும் முறை ரத்து செய்யப்பட்டு, பிளஸ்-2 மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு வாயிலாக மட்டுமே மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை நிரப்ப வேண்டும் என்ற சூழல் எழுந்தது. ஆனால், நிகழ் கல்வியாண்டில் அத்தகைய முறையை மாநில அரசுகள் கடைப்பிடிக்கத் தேவையில்லை என்றும், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் ஏற்கெனவே உள்ள நடைமுறையின்படி மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்தது.
அதற்கான அவசரச் சட்டம், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் அண்மையில் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்காக பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டிய கட்டாயம் நிகழ் கல்வியாண்டில் ஏற்படவில்லை.
அதேவேளையில், அவசரச் சட்டத்தை எதிர்த்து ஆனந்த் ராய் என்ற சமூக ஆர்வலர் சார்பிலும், "சங்கல்ப்' என்ற அமைப்பு சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவசரச் சட்டம் பிறப்பித்த விவகாரத்தில் அதிருப்தி தெரிவித்தது. இருப்பினும், ஏற்கெனவே சம்பந்தப்பட்ட மாநிலங்கள், தங்களது பழைய நடைமுறைப்படி மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை நிரப்பி விட்டதால், மாணவர்கள் நலன் கருதி அவசரச் சட்டத்தை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அதிமுக எதிர்ப்பு: இந்த நிலையில், "நீட்' தேர்வு முறையை அடுத்த கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் அமல்படுத்த வகை செய்யும் இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் பல் மருத்துவக் கவுன்சில் ஆகிய இரு சட்டத் திருத்த மசோதாக்கள் மாநிலங்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டன. அவற்றின் மீதான விவாதத்தில் மாநிலங்களவை அதிமுக குழுத் தலைவரும், எம்.பி.யுமான நவநீத கிருஷ்ணன் பேசியதாவது:
தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு சட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கை தன்னிச்சையானது; சட்டவிரோதமானது; அரசியல் சாசனத்துக்கு எதிரானது. ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும், ஏழை மாணவர்களும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் கல்வி பயிலாதவர்கள். தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு சட்டம் அமல்படுத்தப்பட்டால் அந்த மாணவர்கள் பெரிதும் பாதிக்கக்கப்படுவர் என்றார் நவநீத கிருஷ்ணன்.
கனிமொழி கருத்து:
இதனிடையே, மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி பேசுகையில், "தேசியத் தகுதிகாண் நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள்கள், சிபிஎஸ்இ அல்லது என்சிஇஆர்டி பாடமுறையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது; இதனால், மற்ற மாநிலப் பாடத் திட்டங்களின் அடிப்படையில் படித்த மாணவர்கள் பாதிக்கப்படுவர்; எனவே, மாநிலப் பாடத் திட்டத்தின் அடிப்படையில் நன்றாகப் படித்து, தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர ஏதுவாக மாற்றுத் தீர்வை மத்திய அரசு காண வேண்டும்' என்றார்.
அதேவேளையில், இந்த மசோதாவிற்கு காங்கிரஸ் கட்சியின் நரேந்திர பதானியா, ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சரத் யாதவ், சமாஜவாதி எம்.பி. நரேஷ் அகர்வால், மார்க்சிஸ்ட் எம்.பி. கே.கே.ராகேஷ், பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த திலீப் திர்கே, பகுஜன் சமாஜ் எம்.பி. எஸ்.சி.மிஸ்ரா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். தனியார் மருத்துவக் கல்லூரிகள் இந்தச் சட்டத் திருத்தத்தால் ஆதாயம் அடையாமல் இருப்பதை உறுதி செய்து மத்திய அரசு கண்காணிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, "தனியார் கல்லூரிகளிலும் அடுத்த ஆண்டு முதல் "நீட்' நுழைவுத் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்' என்றார்.
விவாதத்துக்குப் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டத் திருத்த மசோதா மற்றும் பல் மருத்துவக் கல்வி சட்டத் திருத்த மசோதா ஆகியவை மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன.