கலந்தாய்வு காலத்தை நீட்டிக்க வேண்டும்: முதல்வருக்கு மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் கோரிக்கை
மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் மனமொத்த மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கவும், கலந்தாய்வு காலத்தை நீட்டிப்பு செய்யவும் உரிய உத்தரவிட வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வுகளுக்கான கலந்தாய்வு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
இந்தாண்டுக்கான கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை வழங்குவது குறித்தும் மற்றும் ஓராண்டு பணிக்காலத்துக்குள் மனமொத்த மாறுதலில் விலக்களிக்கப்பட்ட பிரிவினர் குறித்தும் அரசாணை எண்.258 மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடைபெறவுள்ள கலந்தாய்வில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறை கடிதம் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு ஜூலை 22 தேதியிட்டு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள் மனமொத்த மாறுதலுக்கு முன்னுரிமை கோருதல் இயலாது என தொடக்க கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். இது மாற்றுத்திறனாளி ஆசிரியர்களைப் பாதிப்பதாகவும், ஏற்கெனவே இருந்து வருகிற உரிமையை பறிப்பதாகவும் உள்ளது.
எனவே, மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கான மனமொத்த மாறுதல் கலந்தாய்வில் ஏற்கெனவே உள்ள முன்னுரிமையைத் தடுக்காத வகையில் தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவிடவும், தற்போது ஏற்பட்டுள்ள கால நெருக்கடியை சரி செய்ய கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கவும், கலந்தாய்வு காலத்தை நீட்டிப்பு செய்யவும் உரிய உத்தரவிடும்படி தங்களை (முதல்வரை) தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கோரிக்கை விடுக்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.