மாணவர்களுக்கு விதைகளை வழங்குவதே சிறந்தது: நீதிபதி ஜோதிமணி வலியுறுத்தல்
ஒரு செடியின் ஒவ்வொரு பரிணாமத்தையும் மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில், அவர்களுக்கு மரக் கன்றுகளுக்கு பதிலாக விதைகளை வழங்க வேண்டும் என்று தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதிபதி பி.ஜோதிமணி வலியுறுத்தினார்.
"ட்ரீ பேங்க் அறக்கட்டளை', நந்தம்பாக்கத்தில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் மக்கள் நல்வாழ்வுச் சங்கம் ஆகியவை சார்பில், அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவாக, ஒரு கோடி விதைகளை விதைக்கும் நிகழ்ச்சியின் தொடக்க விழா, சென்னை பரங்கிமலையில் உள்ள ஹெலன்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் நீதிபதி பி.ஜோதிமணி பேசியதாவது:
"வட்டாட்சியர், வழக்குரைஞர் போன்ற பதவிகளில் இருக்கும் பெற்றோர் ஊழல்வாதியாக இருந்தால் அவர்களை இந்த சமுதாயத்தால் திருத்த முடியாது. குழந்தைகளால் மட்டுமே திருத்த முடியும். ஊழல் மூலம் பெற்ற பணத்தில் நான் சாப்பிட மாட்டேன் என்று குழந்தைகள் தொடர்ச்சியாக அடம்பிடிக்க வேண்டும். இதனால் எடுத்த எடுப்பிலேயே மாற்றம் நிகழ்ந்து விடாது. ஆனால் குழந்தைகள் தங்களது கொள்கையில் உறுதியாக இருந்தால் ஊழல்வாதியாக இருக்கும் பெற்றோரின் எண்ணத்தில் கண்டிப்பாக மாற்றம் ஏற்படும்' என்று அப்துல் கலாம் மாணவர்களிடையே தான் ஆற்றிய கடைசி உரையில் வலியுறுத்தினார்.
ஊழலை வேரறுக்க அப்துல்கலாம் கூறிய அறிவுரையைக் கடைப்பிடிப்பதே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
மரங்கள் வெட்டப்படுவது தொடர்பான வழக்குகளில் நான் அடிக்கடி தடை உத்தரவு போடுவது வழக்கம். இது பலருக்கு என் மீது கோபத்தை ஏற்படுத்தும். ஆனால் அதுகுறித்து நான் கவலைப்படுவதில்லை. மரங்களை வெட்டுவது, தாய்,தந்தையரை வெட்டுவதற்குச் சமம் என்று நினைக்க வேண்டும்.
எனவே, குழந்தைகளுக்கு மரக்கன்றுகள் வழங்குவதைக் காட்டிலும் விதைகள் வழங்குவதே சிறந்தது. அப்போதுதான் அவர்கள் விதையின் வளர்ச்சியை உற்றுக் கவனிப்பார்கள்.
இதன் மூலம் செடியின் பரிணாம வளர்ச்சி குறித்து அறிவியல் ஆசிரியர் கூறியதை மாணவர்கள் கண்கூடாகப் பார்க்க முடியும். ஒரு உயிரின் மதிப்பு என்னவென்று அவர்களுக்கு புரிய வைக்க முடியும் என்றார் நீதிபதி ஜோதிமணி.
முன்னதாக அப்துல் கலாம் குறித்த பாடல்கள் அடங்கிய "கனவே நினைவே' என்ற ஒலிப்பேழை வெளியிடப்பட்டது.