முன்கூட்டி நடத்தப்படுகிறது பி.எட். கலந்தாய்வு: ஆக.1 முதல் விண்ணப்ப விநியோகம்: விண்ணப்பக் கட்டணம் ரூ. 500 ஆக உயர்வு
கடந்த ஆண்டுகளைப் போல் அல்லாமல், 2016-17 கல்வியாண்டுக்கான பி.எட். மாணவர் சேர்க்கை கலந்தாய்வை முன்கூட்டியே நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விண்ணப்பம் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படவுள்ளது.
தமிழகம் முழுவதும் 21 அரசு, அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள 1,777 அரசு ஒதுக்கீட்டு பி.எட். இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை, சென்னை காமராஜர் சாலையில் உள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்தி வருகிறது.
நடப்பு கல்வியாண்டுக்கான கலந்தாய்வை முன்கூட்டியே தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவன முதல்வரும், பி.எட். சேர்க்கைச் செயலருமான தில்லை நாயகி கூறியது:
நிகழாண்டு பி.எட். சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 10-ஆம் தேதி கடைசித் தேதியாகும்.
தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்களும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள், விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் (தன்னாட்சி), காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 600005- என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும். இதற்கான அறிவிப்பு ஓரிரு நாள்களில் கல்லூரி இணையதளமான www.ladywillingdoniase.com- இல் வெளியிடப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பி.எட். கலந்தாய்வுக்கான விண்ணப்பக் கட்டணம் இம்முறை ரூ. 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை இந்தக் கட்டணம் ரூ. 300-ஆக இருந்தது.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.75 அதிகரிக்கப்பட்டு, ரூ.250 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் எங்கெங்கு கிடைக்கும்?
சென்னை சைதாப்பேட்டை கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், குமாரபாளையம், ஒரத்தநாடு, புதுக்கோட்டை, கோவை, வேலூர் காந்திநகர் ஆகிய இடங்களில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகள், திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் லட்சுமி கல்வியியல் கல்லூரி, சேலம் ஸ்ரீ சாரதா கல்வியியல் கல்லூரி, மதுரை தியாகராஜர் பர்செப்டார் கல்லூரி, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்வியியல் கல்லூரி, பாளையங்கோட்டை செயின்ட் இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரி, திருவட்டாறு ஆத்தூர் என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரி ஆகிய 13 மையங்களில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.
பி.இ. பட்டதாரிகளுக்கு 240 இடங்கள்: தமிழக அரசின் ஆணைப்படி, கடந்த 2015-16 கல்வியாண்டு முதல் பொறியியல் பட்டதாரிகளும் பி.எட். படிப்பில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். நிகழாண்டில் இவர்களுக்கு இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல் ஆகிய நான்கு பிரிவுகளில் மட்டும் 20 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த கணக்கீட்டின்படி 220 முதல் 240 இடங்கள் வரை பொறியியல் பட்டதாரிகள் சேர்த்துக் கொள்ளப்படுவர்.
முன்கூட்டியே நடத்தப்படும் கலந்தாய்வு: நிகழாண்டில் பி.எட். கலந்தாய்வை முன்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, ஆகஸ்ட் 3-ஆவது வாரத்தில் சேர்க்கையைத் தொடங்கி, ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
முதலாமாண்டு வகுப்புகளை செப்டம்பர் முதல் வாரத்திலேயே தொடங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றார் தில்லை நாயகி.
பி.எட். மாணவர்களின் 4 மாதகால ஆசிரியர் பயிற்சி பாதிக்கப்படுவதைத் தடுக்கவும், பாடங்களை முழுமையாக நடத்தி முடிக்கவும், 2016-17 பி.எட். கலந்தாய்வை விரைந்து முடித்து, வகுப்புகளை முன்கூட்டியே தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரவலாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.