அறிவியல் கண்காட்சியில் உயிர் காக்கும் கருவி பரமக்குடி அரசு பள்ளி மாணவர் சாதனை
அறிவியல் கண்காட்சியில் மின்சார தாக்குதலில் இருந்து உயிர் பிழைப்பதற்கான கருவியை இடம்பெற செய்து பரமக்குடி அருகில் உள்ள அரசு பள்ளி மாணவர் சாதனை படைத்துள்ளார்.
இந்திய அறிவியல் மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கான அறிவியல் கண்காட்சி ராமநாதபுரத்தில் நடந்தது.
மாவட்ட அளவிலான இந்த கண்காட்சியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் 157 படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
நயினார்கோவில் ஒன்றியம் அயன்சதுர்வேத மங்களம் ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப் பள்ளி மாணவர் காளீஸ்வரன் உருவாக்கிய மின்சார தாக்குதலில் இருந்து உயிர் பிழைப்பதற்கான மின்தடை கருவி முதல் பரிசை பெற்றது
இது குறித்து மாணவர் காளீஸ்வரன் கூறியதாவது: சிறு வயது முதலே வீட்டில் இருக்கும் எலக்ட்ரானிக் பொருட்களை வைத்து ஏதேனும் செய்து வருவேன்.
இந்நிலையில் புயல், மழை காலங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுவதால் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
இதை கட்டுப்படுத்தும் விதமாக, மின்கம்பிகள் அறுந்து விழுந்த உடன் தொடர்புடைய மின் வாரியத்தினருக்குக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும் வகையிலான மின்தடை கருவியை கண்டுபிடித்துள்ளேன்.
இதன் மூலம் அப்பகுதியில் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உயிர் இழப்புகளை தவிர்க்க முடியும், என்றார்.
இம்மாணவனின் கண்டுபிடிப்பானது மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது