விஷம் முறிக்கும் ஈஸ்வரமூலி : மருத்துவ தாவரங்கள் கண்டுபிடிப்பு
திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலையில், கடும் விஷத்தை முறிக்கும் 'ஈஸ்வரமூலி' உள்ளிட்ட ஐந்து வகை மருத்துவ குணமுள்ள தாவரங்களை முதுநிலை ஆராய்ச்சியாளர் மஞ்சுளா கண்டறிந்துள்ளார்.காந்திகிராம பல்கலையின் எதிர்காலவியல் துறை முதுநிலை ஆராய்ச்சியாளர் மஞ்சுளா. சர்வதேச அளவில் மருத்துவ குணமுள்ள தாவர
இனங்களை கண்டறிந்து அதற்கான 'அறிவு சார் சொத்துரிமை' (இன்ட்லெக்சுவல் பிராப்பர்டி ரைட்ஸ்) பெற முயற்சி செய்து வருகிறார்.இரண்டாண்டுகளுக்கு முன்பு எத்தியோபியா, எரித்ரியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று அங்குள்ள மக்களின் வாழ்வியல் மருத்துவ பயன்பாடு குறித்து ஆய்வு செய்தார். தற்போது கோவை வெள்ளியங்கிரி மலை, மேற்குத் தொடர் மலைப் பகுதிகளில் உள்ள பழங்குடியினர் எவ்வாறு மருத்துவ தாவரங்களை பயன்படுத்துகின்றனர் என ஆய்வில் ஈடுபட்டுள்ளார். காந்திகிராம பல்கலை வளாகத்தில் கடும் விஷத்தை முறிக்கக்கூடிய, 'ஈஸ்வர மூலி, ஓரிதழ்தாமரை, மிளகரணை, குன்றிமணி, வீராலி' முதலிய மருத்துவ குணமுள்ள ஐவகை தாவரங்கள் வளர்ந்திருப்பதை கண்டறிந்தார்.
அவர் கூறியதாவது: எனது ஆய்வு துவங்கியதும், பல்கலை வளாகத்தில் கொடிய பாம்புகளின் விஷத்தை முறிக்கும் தன்மையுள்ள 'ஈஸ்வரமூலி' உள்ளிட்ட ஐவகை மருத்துவ தாவரங்களை வளர்ந்திருப்பதை கண்டேன். இவற்றின் மூலக்கூறுகளின் மருத்துவ பயன்கள் குறித்து ஆய்வு செய்து, பல்கலை காப்புரிமை மையத்தின் மூலம் (ஐ.பி.ஆர்.,) அறிவு சார் சொத்துரிமை பெறுவேன், என்றார்.