ரூ. 207 கோடி உதவித் தொகை 6.96 லட்சம் மாணவர்கள் பயன்
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகைக்காக ரூ.207.96 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சட்டப்பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபின மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கு 1,338 தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 1,195 விடுதிகள் சொந்தக் கட்டடங்களில் செயல்பட்டு வருகின்றன. 107 விடுதிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வரும் நிலையில், மீதமுள்ள 36 விடுதிகளுக்கு நடப்பாண்டில் கட்டடம் கட்டும் பணி தொடங்கப்படும்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் அனைத்து விடுதிகளுக்கும் இட்லி குக்கர், நீராவிக் கொதிகலன்கள், சலவை இயந்திரங்கள் வழங்கப்படும். நடப்பு நிதி ஆண்டில் உணவு வழங்குவதற்காக ரூ.70.64 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்க ரூ.168.04 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இயங்கி வரும் 290 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளுக்காக ரூ.104.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் 6.96 லட்சம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபின மாணவர்களின் பள்ளிக் கல்விக்கான உதவித் தொகை வழங்க ரூ.21.40 கோடியும், உயர்க் கல்விக்கான உதவித் தொகை வழங்க ரூ.186.56 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் துணைத் திட்டத்துக்கு ரூ.722 கோடி: நடப்பு நிதி ஆண்டில் ஆதிதிராவிடர் துணைத் திட்டத்துக்கு ரூ.12,462 கோடியும், பழங்குடியினர் துணைத் திட்டத்துக்கு ரூ.722 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் நலத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் 98,039 மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கு 1,314 விடுதிகளும், பழங்குடியினர் நலத் துறையின் கீழ் 2,782 மாணவர்களுக்கு 42 பழங்குடியினர் விடுதிகளும், 30,933 மாணவர்களுக்கு 306 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன.
தற்போது 81 விடுதிகளுக்குச் சொந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டு வரும் நிலையில், ரூ. 27.48 கோடியில் 24 விடுதிகள் புதிதாகக் கட்டப்படும். உணவு வழங்குவதற்கான தொகை ரூ. 103.15 கோடியும், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, விடுதி பராமரிப்பு ஆகியவற்றுக்கு ரூ.83.80 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
விலையில்லா மிதிவண்டிக்கு ரூ.64.86 கோடி: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண் குழந்தைகளின் பள்ளிச் சேர்க்கையை அதிகரிக்க, ஊக்க உதவித் தொகை வழங்க ரூ.55.11 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி, உயர்க் கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கு முறையே ரூ.75.61 கோடி, ரூ.1,429.94 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்க ரூ.64.86 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ரூ.130 கோடி: தாட்கோ நிறுவனம் மூலம், தொழில்களைச் செய்வதற்கான பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்துக்காக மத்திய சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ் ரூ.130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நபார்டு வங்கிக் கடனுதவியுடன் ரூ.12 கோடி செலவில், வனத்துறை நடத்தும் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.