கல்வித் தரத்தை உயர்த்த அதிக நிதி ஒதுக்க வேண்டும்
நாட்டின் கல்வித் தரத்தை மேம்படுத்த, கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியை அதிகப்படுத்தப்பட வேண்டும் என விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் கூறினார்.
சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில், அவர் பேசியதாவது:-
இந்தியாவில் 50 கோடி இளைஞர்கள் உயர்கல்வியில் சேர தகுதியுடன் காத்திருக்கின்றனர். 700 பல்கலைக்கழகங்கள், 40 ஆயிரம் கல்லூரிகள் இருந்தும், அனைவருக்கும் உயர்கல்வி வழங்க முடியவில்லை.
இதனால், மருத்துவப் படிப்பு உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை மேற்கொள்வதற்காக ஏராளமானோர் வெளிநாடுகளுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுபோல, இந்தியக் கல்வி நிறுவனங்களில் வந்து படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
இந்திய கலாசார உறவுகளுக்கான கவுன்சில் (ஐ.சி.சி.ஆர்.) சார்பில் வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் வந்து உயர்கல்வி படிக்க 2013-14-ஆம் ஆண்டில் 3,465 கல்வி உதவித் தொகைகள் அறிவிக்கப்பட்டன. இவற்றில் 40 சதவீதம் பயன்படுத்தப்படவே இல்லை.
இவை அனைத்துக்கும் கல்வித் தரம், போதிய உள்கட்டமைப்பு வசதிகள், உயர் கல்வியில் போதிய இடங்கள் இல்லாததே காரணமாகும். இந்தக் குறைகளைப் போக்க, கல்வித் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
இதையடுத்து, ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலை. (ஆராய்ச்சி) அலுவலர் எஸ்.பி. தியாகராஜன் பேசுகையில், கல்வித் துறை மேம்பாட்டுக்கு மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டது, உயர்கல்வியில் நவீன வளர்ச்சிகள் வேகமாக இடம்பெற்று வரும் நிலையில், பாரம்பரிய நடைமுறையையே இப்போதும் பின்பற்றி வருவது, கல்வித் தரத்தில் மத்திய, மாநில அரசுகள் போதிய அக்கறை காட்டாதது போன்றவையே, இந்தியாவில் உயர் கல்வியின் தரம் பின்தங்கியிருப்பதற்கு முக்கியக் காரணிகள்.
இவற்றை களைவதற்கான நடவடிக்கைகள் அரசுகள் விரைந்து எடுக்க வேண்டும் என்றார்.