சிறந்த உலகம் அமைய இளைஞர்கள் உதவ வேண்டும்: பியூஷ் கோயல்
சிறந்த உலகம் அமைய, ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் சித்தாந்தங்களை இளைஞர்கள் பின்பற்றி நடக்க வேண்டும் என்று மத்திய மின் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) பியூஷ் கோயல் வலியுறுத்தினார்.
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் மூன்று நாள் ஸ்ரீ சத்ய சாய் உலக இளைஞர்கள் விழாவை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:-
சத்யம், தர்மம், சாந்தி, அன்பு, அகிம்சை ஆகியவற்றை பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா வலியுறுத்தி வந்தார். சிறந்த உலகம் அமைய இவை முக்கியமானவை. இளைய சமுதாயம் பாபாவின் உயரிய அக் கருத்துகளை பின்பற்றவும் அவற்றை உலகம் முழுவதும் பரப்பவும் உறுதி பூண வேண்டும்.
உடலில் பல பகுதிகள் இருப்பினும் ஒரே ரத்த ஓட்டமே நெடுகிலும் பாய்ந்து அவை அனைத்தையும் உயிருடன் இயங்க வைத்திருப்பது போல அன்பு ஒன்றே அனைத்துலக மக்களையும் ஜீவ சக்தியுடன் வாழ வைக்கிறது என்று பாபா குறிப்பிட்டுள்ளார்.
பதினாறு முதல் முப்பத்தைந்து வயது வரையிலான காலம் வாழ்க்கையில் முக்கியமான காலம். அந்த வயதில் உடலையும் மனதையும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள வேண்டும்.
இளமைக் காலத்தில் கிடைக்கும் ஒப்பற்ற ஆற்றலை தவறான காரியங்களில் ஈடுபட்டு வீணாக்கி விடாது ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
சமூக விரோதச் சக்திகளால் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களாக இன்றைய இளைய சமுதாயம் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். இளைஞர்கள் தங்களை பண்படுத்திக் கொண்டு சமுதாயத்தையும் சீர்படுத்த வேண்டும். உலகில் இன்று பயங்கரவாதம், பருவநிலை மாற்றம் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இவற்றை எதிர்கொண்டு சமாளிக்க நாடு உறுதி பூண்டுள்ளது. இதற்கு இளைஞர்களின் பங்கும் முக்கியமானது என்றார் பியூஷ் கோயல்.
ஸ்ரீ சத்ய சாய் அமைப்பின் அகில இந்தியத் தலைவர் நிமிஷ் பாண்டியா, ஸ்ரீ சத்யசாய் சர்வதேச அமைப்பு (பிரசாந்தி கவுன்சில்) தலைவர் நரேந்திரநாத் ரெட்டி, சர்வதேச இளைஞர் ஒருங்கிணைப்பாளர் சிவேந்திர குமார் உள்ளிட்டோர் பேசினர்.
விழாவில் 68 நாடுகளிலிருந்து மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு, புதுச்சேரியிலிருந்து 140 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
முன்னதாக வேத கோஷங்கள் முழங்கின. சர்வத மத பிரார்த்தனை நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் தங்களது நாட்டுக் கொடிகளை ஏந்தியபடி விழா தொடக்கத்தில் அணிவகுத்து வந்தது வண்ணமிகு காட்சியாய் இருந்தது. மூன்று நாள் உலக இளைஞர்கள் விழா வியாழக்கிழமை நிறைவடைகிறது.