மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் ஐஐஐடி: புதிய மசோதா கொண்டு வர திட்டம்
இந்திய தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் (ஐஐஐடி) செயல்பாடுகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான மசாதோவை நாடாளுமன்றத்தில் கொண்டு வரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தொடங்கப்பட்ட ஐஐஐடி நிறுவனங்களின் நிர்வாகச் செயல்பாடுகள் தற்போது அரசு மற்றும் தனியாரின் கூட்டுக் கட்டுப்பாட்டில் உள்ளன. அதை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.
தில்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவாலியரில் உள்ள ஐஐஐடி வளாகத்தில் அந்நிறுவனத்துக்கான செயலகத்தை அமைப்பது குறித்தும் அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. வெளிநாட்டு மாணவர்களை அதிக அளவில் சேர்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.