வளரும் சக்தி கலை இலக்கியப் போட்டி: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு
ராமலிங்கர் பணி மன்றம் சார்பில் நடைபெறவுள்ள மாநில அளவிலான பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கலை இலக்கியப் போட்டிகளில் பங்கேற்க ஜூலை 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து ராமலிங்கர் பணி மன்றத் தலைவர் ம.மாணிக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:-
மறைந்த டாக்டர் நா.மகாலிங்கம் நினைவாகவும், சென்னை ராமலிங்கர் பணிமன்றத்தின் 51-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டும், வளரும் சக்தி- கலை இலக்கியப் போட்டிகள் மாநில அளவில் நடத்தப்பட உள்ளன. இதற்காக 15 ஆயிரம் பள்ளி, கல்லூரிகளுக்கு அஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டியும், பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, இசைப் போட்டி, மனனப் போட்டியும் நடத்தப்படுகிறது.
முதல் கட்டமாக சென்னை, கோவை, சேலம், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, விழுப்புரம், தஞ்சாவூர் என 8 ஊர்களில் மண்டல அளவிலான போட்டிகள் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படும். மாநில அளவில் முதலிடம் பெறுவோருக்கு ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,500, மூன்றாம் பரிசாக ரூ.5,000, மண்டல அளவில் முதலிடம் பெறுவோருக்கு ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000 பரிசாக வழங்கப்படுகிறது.
அத்துடன் மண்டல அளவில் ஒவ்வொரு போட்டியிலும் முதல் 10 இடங்களைப் பெறுபவர்கள் ஜனவரி மாதம் பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறவுள்ள சிறப்புப் பயிலரங்கில் பங்கேற்பார்கள்.
இந்தப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் www.mcet.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து ஜூலை 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது