கல்விக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இந்தியா வளர்ந்த நாடாக முடியாது : வி.ஐ.டி. வேந்தர் ஜி. விஸ்வநாதன்
கல்விக்கு முக்கியத்துவம் அளிக்காமல், வளர்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பெறுவது கடினம் என விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் கூறினார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் புதிதாகத் தொடங்கப்பட உள்ள ஆற்றல்சார் மையத்தின் கல்வெட்டைத் திறந்துவைத்து ஜி.விசுவநாதன் பேசியது:-
இந்தியா சுதந்திரம் பெற்றபோது, எழுத்தறிவு நிலை வெறும் 6 சதவீதமே இருந்தது. அதிலும், பெண்களின் எழுத்தறிவு நிலை மிக குறைவு. இன்று பெண்களின் எழுத்தறிவு நிலை 65 சதவீதத்தையும், ஆண்களின் எழுத்தறிவு நிலை 80 சதவீதத்தையும் எட்டியுள்ளது.
இருந்தபோதும், பெண்களில் 20 சதவீதத்துக்கும் குறைவானவர்களும், ஆண்கள் 23 சதவீதமும் உயர்கல்வியை பெறுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். கல்விக்கு முக்கியத்துவம் அளிக்காமல், வளர்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பெறுவது கடினம்.
1991-ஆம் ஆண்டில் புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகம் செய்தது முதல், வளர்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பெற விரும்புகிறோம். ஆனால், இப்போதுதான் ஆரம்பக் கட்ட முயற்சிகளை எடுத்து வருகிறோம்.
கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாடுகள்தான் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளாக உருவெடுத்திருக்கின்றன.
1960-ஆம் ஆண்டில் இந்தியா, தென்கொரியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளின் தனி மனித வருமானம் பெரும்பாலும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தன. ஆனால், இன்று தென்கொரியாவில் தனி மனித வருமானம் ரூ.6,696 என்ற அளவிலிருந்து ரூ. 23,43,600 என்ற அளவுக்கு உயர்ந்திருக்கிறது. ஜப்பானில் ரூ. 24,10,560 என்ற அளவில் உயர்ந்திருக்கிறது.
138 கோடி மக்கள் உள்ள சீனாவில் தனி மனித வருமானம் என்பது ரூ. 5,49,072 என்ற அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இதை இந்த ஆண்டில் ரூ.8 லட்சமாக உயர்த்தவும் சீனா திட்டமிட்டு வருகிறது.
ஆனால், சீனாவைவிட சற்று குறைவாக 132 கோடி மக்கள் தொகையை கொண்டுள்ள இந்தியாவின் தனி மனித வருவாய் ரூ.1,20,528 என்ற அளவிலேயே இருந்து வருகிறது.
ஒரு நாடு பொருளாதாரத்தில் வளர்ந்து வருகின்றபோது, குற்றங்கள் குறைய வேண்டும். அதோடு, பொருளாதார வளர்ச்சியின் பலன் நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். ஆனால், இந்த இரண்டுமே இங்கு நடக்கவில்லை.
பெரும்பாலான வெளிநாடுகளில் இருக்கும் வளத்தில் 43 சதவீதத்தை மட்டுமே உயர்நிலையில் இருக்கும் 1 சதவீத மக்கள் அனுபவிக்கின்றனர். இந்தியாவில் உயர் நிலையில் இருக்கும் 1 சதவீதத்தினர், நாட்டின் 53 சதவீத வளத்தை அனுபவிக்கும் நிலை இருந்து வருகிறது. இது எதிர்காலத்துக்கு மிகவும் ஆபத்தானது.
எனவே, அனைவருக்கும் சமமான, தரமான கல்வி வழங்குவதன் மூலமே பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும். பொருளாதார வளர்ச்சியால் கிடைக்கும் பயனும் அனைவருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு நடைபெறுவதே இல்லை.
இந்தியாவில் உயர்கல்வி பெறுவதற்கு தகுதியுடைய 18 வயதிலிருந்து 23 வயது வரையானவர்கள் 14 கோடி பேர். ஆனால், 40 ஆயிரம் கல்லூரிகள், 780 பல்கலைக்கழகங்கள் மட்டுமே உள்ளன. இவை அனைத்திலும் வெறும் 3 கோடி பேருக்கு மட்டுமே உயர்கல்வி வழங்க முடியும்.
இந்தியாவில் 50 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்கள் மட்டுமே உள்ளன. கலை-அறிவியல் பட்டப் படிப்புகளிலும் இதை நிலைதான் உள்ளது.
எனவே, கல்வி நிலையை மேம்படுத்த, அதற்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவை மத்திய அரசு உயர்த்த வேண்டும். ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்க வேண்டும் என கடந்த 50 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால், கல்விக்கான நிதி ஒதுக்கீடு இதுவரை 4 சதவீதத்தைத் தாண்டவில்லை.
வளர்ந்த நாடுகள் அனைத்தும், கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளன. பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை அமைய வேண்டும் என்றார்.