புத்தகம் அளித்தலும்... புண்ணியம் கோடியே!
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்; ஆலயம் பதினாயிரம் நாட்டல்; பின்னருள்ள தருமங்கள் யாவும்; பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்; அன்னயாவினும் புண்ணியம் கோடி; ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்றான் பாரதி.
பெரிய நாயகனின் புதிய படத்திற்கு, 'டிக்கெட்' எடுக்க முண்டியடிப்பதைப்போல் இளைஞர் கூட்டம் முண்டியடிக்க, அந்த காலைப் பொழுதிலும், காமராஜர் அரங்கம் சற்றே வியர்த்து தான் போனது.
கல்லுாரி மாணவர்கள், பெற்றோர் என இரு பிரிவு மட்டுமே அங்கே கோலோச்சியது. வடம் பிடிக்க இடம் பிடிப்பதைப்போல அனைத்து கண்களிலும் எதிர்பார்ப்பு, இருக்கை போட்டு உட்கார்ந்திருந்தது.
நிகழ்காலத்தின் குறுக்குவெட்டு அரங்கில் நுழைந்தோம். திரைப்பட நடிகர் உதயநிதி ஸ்டாலின், ''எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. அடுத்தவர்களுக்கு உதவுபவர்களை கடவுள் என்றால் தவறில்லை. இவர்கள் கல்லுாரி மாணவர்களின் கல்விக்கு, புத்தகங்கள் கொடுத்து உதவுகின்றனர்,'' என, பாராட்டிக் கொண்டிருந்தார்.
ஆம்... அது, 'ராஜஸ்தான் இளைஞர் சங்க'த்தின் இலவச புத்தகங்கள் வழங்கும் விழா. அதன் வரலாற்றையும், கடந்து வந்த பாதையையும் விளக்கிக் கொண்டிருந்தனர், அந்த சங்கத்தின் அங்கத்தினர்கள்.
அதன் தலைவர், எம்.பிரவீன் ஜெயினிடம் பேசினோம். அவர், அந்த அமைப்பின் கடந்த காலம் மற்றும் நிகழ்காலத்தின் குறுக்குவெட்டு தோற்றத்தை இவ்வாறு விவரித்தார்:
முன்பெல்லாம், கல்விக் கட்டணத்தை விட, புத்தகங்களின் விலை அதிகமாக இருந்தது. அதனால், நிறைய இளைஞர்கள், பாட புத்தகங்களை வாங்க வசதியில்லாததால் கல்லுாரி படிப்பை பாதியில் விட்டுள்ளனர்.
அதனை போக்கவே, 52 ஆண்டுகளுக்கு முன், அதாவது, 1964ல், ராஜஸ்தான் இளைஞர் சங்கம், ராஜஸ்தானில் இருந்து, சென்னைக்கு வந்து வியாபாரம் செய்யும் ஜெயின் சமூகத்தவரால் துவக்கப்பட்டது. அப்போது, 20 மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் வழங்கப்பட்டன.
அதன் சேவை, தேவையின் அடிப்படையில் விரிவடைந்தது. தற்போது, 2,500 மாணவர்களுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்களை வழங்கி வருகிறது. பொறியியல், கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு சுற்றறிக்கை மூலம், ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் (ஆர்.ஒய்.ஏ.,) எனப்படும், ராஜஸ்தான் இளைஞர் சங்கத்தின் புத்தக வங்கி திட்டம் பற்றி தெரிவிக்கிறோம்.
அதாவது, சென்னையில் உள்ள ஒவ்வொரு பொறியியல் கல்லுாரிக்கும், ஏப்ரல், மேயிலும், கலை அறிவியல் கல்லுாரிகளுக்கு ஜூனிலும் சுற்றறிக்கை அனுப்புகிறோம்.
அதில், புத்தகங்கள் தேவைப்படுவோர், பாட வாரியாக, தலைப்பு, ஆசிரியர் பற்றிய குறிப்புகளை எங்கள் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என்பதையும், விண்ணப்பிக்க கடைசி தேதியையும் குறிப்பிட்டு இருப்போம்.
வரும் விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் புத்தகங்களை சேகரித்து, அவற்றை கட்டி, விண்ணப்பத்தின் எண்ணை அதில் எழுதி அடுக்கி விடுவோம். ஒவ்வொரு ஆண்டும், ஜூலையில், காமராஜர் அரங்கில், புத்தகங்கள் வழங்கும் விழாவில் அவற்றை மாணவர்களுக்கு வினியோகிக்கிறோம்.
இந்த ஆண்டு, 2,500 மாணவர்களுக்கு, ஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்களை வழங்கி உள்ளோம்.
வேலுார், அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் சிறிய அளவில் புத்தக வினியோகத்தை துவங்கி உள்ளோம். எதிர்காலத்தில், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாணவர்களுக்கும் இலவச புத்தகங்களை வழங்க வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோள்.
அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் செலுத்தி, விருது வழங்கி ஊக்கப்படுத்துகிறோம். அதையும், விரிவாக்கும் திட்டம் உள்ளது.
இவ்வாறு அமைப்பின் எதிர்காலம் குறித்து பேசினார் பிரவீன்.
வேலைவாய்ப்பு முகாம்
இன்றைய ஏழை மாணவர்களுக்கு, படித்தபின் வேலை கிடைப்பதில் அதிக சிரமம் உள்ளதால், 2014ம் ஆண்டு, ஜூன் மாதம், வேலைக்கான வழிகாட்டி, வேலைவாய்ப்பு முகாமையும் நடத்தியுள்ளனர். அதில், 65 பெருநிறுவனங்கள் பங்கேற்றன. கலந்து கொண்ட, 1,500 மாணவர்களில், 650 மாணவர்களுக்கு, அதே இடத்தில், பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
'அடுத்த ஆண்டு, ஜனவரியில் வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளோம். அதில், அதிக எண்ணிக்கையில் பெருநிறுவனங்களையும், மாணவர்களையும் ஒருங்கிணைக்க உள்ளோம்' என பெருமிதத்துடன் கூறினார் பிரவீன்.
மாணவர்களும், பெற்றோரும், நன்றி கலந்த, ஒரே குரலில் ஒலித்த கருத்து, 'புத்தகம் வாங்கும் சுமை குறைந்தது. அந்த பணத்தை, கட்டணங்களுக்கு பயன்படுத்தலாம்' என்பதே!
தொடர்புக்கு:
044 - 2561 0396, 98401 24440
rya@live.in, www.ryabookbank.com