சிறார்களுக்கும் தலைக்கவசம் விரைவில் கட்டாயமாகிறது
இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் 4 வயதுக்கும் மேற்பட்ட சிறார்களுக்கும் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது அமலில் இருக்கும் சட்டத்தின்படி, இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் பெரியவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை மீறுவோர் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம், சிறார்களுக்கு தலைக்கவசத்தை கட்டாயமாக்குவது குறித்து சட்டத்தின் எந்தப் பிரிவிலும் குறிப்பிடப்படவில்லை.
இந்நிலையில், சாலை விபத்துகளில் சிறார்களின் இறப்பு விகிதம் அதிக அளவு இருப்பதையடுத்து, 4 வயதுக்கும் மேற்பட்ட சிறார்களுக்கு இருசக்கர வாகன பயணத்தின்போது தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக 1988-ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் சில திருத்தங்களைச் செய்துள்ளது.
இந்தத் திருத்தங்கள் தொடர்பாக பிற அமைச்சகங்களின் கருத்துகளைக் கேட்டு, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் குறிப்புகளை அனுப்பியிருக்கிறது. மேலும், வரும் 18ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், "நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதும், தலைக்கவசம் அணியாமல் சிறார்களை வாகனத்தில் ஏற்றிச் செல்லும் பெரியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு போக்குவரத்து போலீஸாருக்கு அதிகாரம் அளிக்கப்படும்' என்றார்.
மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சக வட்டாரத் தகவல்கள் கூறுகையில், "கடந்த 2015ஆம் ஆண்டில் சாலைப் போக்குவரத்தில் 12,500 சிறார்கள் இறந்தனர்; அவர்கள் அனைவரும் 17 வயதுக்கும் குறைந்தவர்கள். அவர்களில் பெரும்பாலானோர், இருசக்கர வாகனத்தில் செல்லும்போது நேரிட்ட விபத்துகளில் பலியானவர்கள் ஆவர். இதையடுத்தே, சிறார்களுக்கும் இருசக்கர வாகனப் பயணத்தின்போது தலைக்கவசத்தை கட்டாயமாக்குவதென 1988ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வருகிறது' என்றன.
சிறார்களுக்கு தலைக்கவசம் அணியாமல் அவர்களது பெற்றோர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வதற்கு, அதன் எடை அதிகமாக இருப்பதும், வடிவமைப்பு சரியாக இல்லாததுமே காரணம் எனத் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்யவும் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் நிபுணர் குழுவை அமைத்துள்ளது.