புத்தகங்கள் நன்கொடை அரசு பள்ளி புது முயற்சி
திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூலகத்துக்கு, பொதுமக்களிடம் இருந்து நன்கொடையாக புத்தகங்கள் பெறுவதற்கு, முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெரும்பாலான அரசு பள்ளிகளில், நூலகம் பெயரளவுக்கே உள்ளது. குறைவான புத்தகங்கள், நூலகர் இல்லாதது, ஊழியர் பற்றாக்குறை போன்ற காரணங்களால், நூலகம் செயல்படாத நிலையே காணப்படுகிறது. பயன்பாட்டில் இருக்கும் சில பள்ளி நூலகங்களில், புதிய புத்தகங்கள் இருப்பதில்லை; பள்ளிக்கு தேவையான புத்தகங்களை, கல்வித்துறையும் கேட்டு அனுப்புவதில்லை.
சமீபத்தில் புனரமைக்கப்பட்ட நஞ்சப்பா மேல்நிலைப்பள்ளி நூலகத்தில், புதிய நூல்கள் வாங்குவதற்கு, நன்கொடையாளர்களின் உதவி கோரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பள்ளி வளாகத்தில், பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில், முன்னாள் மாணவர்கள், நடைபயண நண்பர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள், தங்களால் இயன்ற நல்ல புத்தகங்களை, நூலகத்துக்கு வழங்கி, மாணவர்களுக்கு உதவலாம், என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பள்ளி ஆசிரியரிடம் கேட்டபோது, நல்ல புத்தகங்களை தேடிப்பிடித்து வாங்கும் பலர், படித்தபின், அவற்றை வீட்டில் வைத்திருப்பர். மேலும் சிலர், வாங்கிய புத்தகங்களை பிரிக்க நேரமின்றி கூட, அப்படியே பத்திரப்படுத்தி வைத்திருப்பர். படித்த அல்லது பயன்படுத்தாத புத்தகங்களை, பள்ளி நூலகங்களுக்கு வழங்கினால், நூலகம் வளரும்; மாணவர்களும் பயன்பெறுவர் என்பதால், இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது, என்றார்.