ஐ.நா. வீர தீர விருதைப் பெறும் முதல் இந்திய கடற்படை பெண் கேப்டன்
கடலில் வீர தீரச் செயல் புரிவதற்காக ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பு அளிக்கும் விருதை முதல் தடவையாக இந்திய கடற்படையைச் சேர்ந்த பெண்ணான கேப்டன் ராதிகா மேனன் பெற உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒடிஸா மாநிலம், கோபால்பூர் அருகே வங்காள விரிகுடா கடலில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 22-ஆம் தேதி, மீனவர்கள் 7 பேர் சென்ற படகு மூழ்கியது. அந்த நேரத்தில், பலத்த மழையும், சூறாவளிக் காற்றும் வீசிக் கொண்டிருந்தது. எனினும், கடலுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களைக் கண்ட ராதிகா மேனன், அவர்களை மீட்க உடனடியாக உத்தரவிட்டார்.
அதன்படி, ராதிகா மேனன் தலைமையிலான மீட்புக் குழுவினர் 7 மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர். இதுபோன்று கடலில் வீர தீரச் செயலை புரிபவர்களுக்கு ஐ.நா.வின் உதவியுடன் லண்டனில் இயங்கி வரும் சர்வதேச கடல்சார் அமைப்பு ஆண்டுதோறும் விருது அளித்து வருகிறது.
நிகழாண்டு, அந்த விருதுக்காக ராதிகா மேனனின் பெயரை மத்திய அரசு பரிந்துரைத்தது. இதையடுத்து, அந்த அமைப்பின் உறுப்பினர்கள் கலந்தாலோசனை நடத்தி, வீர தீர விருதுக்கு ராதிகா மேனனை தேர்வு செய்தனர். லண்டனில் நவம்பர் மாதம் 21-ஆம் தேதி விருது வழங்கும் விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.