திருநங்கைகளுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு: 6 மாதங்களுக்குள் பரிசீலிக்க உத்தரவு
கல்வி, வேலைவாய்ப்புகளில் திருநங்கைகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு கோரும் மனுவை 6 மாதங்களுக்குள் பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக திருநங்கைகள் சொப்னா, கிரேஷ் பானு, செல்வி மனோஜ் பிரேம்குமார், வித்யா, செல்வம் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு விவரம்: முதுகலைப் பட்டப் படிப்புகளை முடித்துள்ளோம். திருநங்கைகளாக மாறி, பல்வேறு இன்னல்கள், துயரங்களை அனுபவிக்கிறோம்.
உயர்நீதிமன்ற உத்தரவின்படி, 2015-இல் டி.என்.பி.எஸ்.சி. நடத்திய தேர்வில் பங்கேற்றோம். ஆனால், திருநங்கைகள் நல வாரியம் அமைத்தும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவில்லை.
அனைத்து தேர்வுகளிலும் திருநங்கைகள் அல்லது சிறப்புப் பிரிவினர் என்ற பிரிவின் கீழ், தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்புகளில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். குடும்பத்தாரின் ஆதரவு இல்லாததால், சலுகைகள் வழங்கும்போது திருநங்கைகள் தவறான வழிக்கு செல்லமாட்டார்கள் என்று கோரியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவு: திருநங்கைகளின் சமூக அவல நிலையை கூறியுள்ளனர். கௌரவமாக வாழ்வதற்கு இட ஒதுக்கீடு கோருகின்றனர். எனவே, அனைத்து துறைகளின் கருத்துகளை கேட்டு, தமிழக சமூக நலத்துறை தகுந்த முடிவினை 6 மாதங்களுக்குள் எடுக்க வேண்டும் என்றனர்.