புதிய தொழில்நுட்பத்தில் திசைசெயலியை தயாரிக்க திட்டம்
மேம்படுத்தப்பட்ட, புதிய தொழில்நுட்பத்தில் அமைந்த திசைசெயலியை (ரூட்டர்ஸ்) தயாரிக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருவதாக, பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர், கோவா பொறியியல் கல்லூரியின் நிகழ்ச்சியில் பேசியதாவது:
தகவல் என்பது முக்கிய கருவி போன்றது. வெளிநாடுகளில் இருந்து இயங்கும் திசைசெயலிகளை இங்கு பயன்படுத்துவது ஏற்புடையதல்ல. ஏனெனின் அவற்றால் நாசவேலைகள் நடைபெறவும், முக்கியத் தகவல்கள் கசியவும் வாய்ப்புள்ளது. குறைந்தபட்சம் முக்கியப் பணிகளுக்கான திசைசெயலிகள் நமது சொந்த தயாரிப்பாக இருக்க வேண்டும்.
மேம்படுத்தப்பட்ட, புதிய தொழில்நுட்பத்தில் அமைந்த திசைசெயலியை உருவாக்க இந்தியாவும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. திசைசெயலிகள் தொலைத்தொடர்புக்கு முக்கியமானதாகும். நமது தொலைத்தொடர்புத் தகவல்கள் வெளியே கசியக் கூடாது என்று நாம் நினைத்தால், நமக்கென்று சொந்தமாக திசைசெயலியை உருவாக்க வேண்டும்.
கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு விஞ்ஞானிகள் நம்மிடம் உள்ளனர். அறிவுப் பரிமாற்றத்துக்காக பல்வேறு கல்வி நிறுவனங்களுடன் பாதுகாப்புத் துறை ஒப்பந்தம் செய்துள்ளது என்றார் மனோகர் பாரிக்கர்.