ஆவண நகல் வைத்திருந்தால் போதும் : மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்
வாகனம் ஓட்டுவோர், ஓட்டுனர் உரிமம், வாகன இன்சூரன்ஸ் போன்ற அசல் ஆவணங்களை வைத்திருப்பதற்கு பதில், அவற்றின் நகல் அல்லது ஸ்கேன் செய்த காப்பியை வைத்திருப்பதற்கான சட்டத்திருத்தம், வரும் மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட
உள்ளது.தற்போது, அசல் டிரைவிங் லைசென்ஸ், வண்டியின் ஆர்.சி., இன்சூரன்ஸ் போன்றவற்றை வைத்திருப்பது கட்டாயமாக உள்ளது. போக்குவரத்து போலீசார் சோதனையிடும் போது, இவற்றை காட்டவில்லை என்றால், அபராதம் விதிக்கின்றனர். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில், அவை தொலைந்து போனாலோ அல்லது கிழிந்து போனாலோ சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்ய, மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் முன்வந்துள்ளது. அதன்படி, வாகனங்களுக்கான அனைத்து ஆவணங்களையும், ஓட்டுனர் உரிமத்தையும், நகல் எடுத்து, தேவைப்படும் போது, போக்குவரத்து போலீசாரிடம் காட்டினால் போதும். மேலும், புதிதாக ஓட்டுனர் உரிம விண்ணப்பம் கொடுப்போர் மற்றும் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க விரும்புவோர், ஏதாவது ஒரு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கும் வசதி, குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம் போன்ற திருத்தங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. மோட்டார் வாகன சட்டத்தின் புதிய திருத்தத்தை, வரும் மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற அமைச்சகம் முடிவு செய்துள்ளது.