சொந்த கிராமத்தை பசுமையாக்க 1,000 மரக்கன்று நட்ட மணப்பெண்
திருமணத்திற்கு முன், கிராமம் முழுவதும், 1,000 மரக்கன்றுகளை நட்ட மணப்பெண்ணை, பசுமை ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர். பீஹார் மாநிலம், மஜார் கிராமத்தை சேர்ந்தவர் ஜிதேந்திர சிங். இவரது மகள் கிரண். சிறு வயதில் இருந்தே, செடி, கொடிகளை பாதுகாப்பதிலும், மரங்களை வளர்ப்பதிலும் ஆர்வம் மிக்கவராக இருந்தார்.
தேசிய விருது : சொந்த ஊரில் பள்ளிப் படிப்பை முடித்த கிரண், மோதிஹாரியில் உள்ள கல்லுாரியில் பட்டப்படிப்பையும், டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் பட்ட மேற்படிப் பையும் முடித்தார். தற்போது, பாட்னாவில் உள்ள, மாநில சுகாதார கமிட்டியில் பணிபுரிகிறார். பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கும்போது, கிராமத்தில் இருந்த செம்மரங்களில் ஏற்பட்ட நோய் தாக்குதலை நீக்குவதற்கான மருந்தை சொந்தமாக தயாரித்து தெளித்ததில், மரங்கள் துளிர்த்தன. அதற்காக, 2006ல், ஜனாதிபதியிடம் இருந்து, தேசிய அறிவியல் விருதும், 2007ல் அப்போதைய மாநில கவர்னர் பூட்டாசிங்கிடம் இருந்து பாராட்டும் பெற்றார்.
மணப்பெண் கோலத்தில்...: இவருக்கும், வைஷாலி மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. ரமேஷ், மிசோரம் தேசிய தொழில்நுட்ப கழக பேராசிரியராக பணியாற்றுகிறார். சிறு வயதில் இருந்தே, சுற்றுச்சூழல் மற்றும் மரம் வளர்ப்பதில் ஆர்வம் மிக்க கிரண், தன் திருமணத்தை அனைவரும் நினைவில் வைத்திருக்கும் வகையில், கிராமம் முழுவதும், 1,000 மரக்கன்றுகளை நட முடிவு செய்தார்.
அதன்படி, கையில் மெகந்தியுடன், மணப்பெண் உடைகளை அணிந்த கிரண், திருமணத்தன்று அதிகாலை முதல், தான் படித்த பள்ளி வளாகம் முதல், கிராமம் முழுவதும், 450 செம்மரக் கன்றுகளுடன், நாவல், தேக்கு, கோங்கு உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டார். அதன்பின், திருமண சடங்குகளில் கலந்து கொண்டார். கிரணின் இந்த முயற்சிக்கு, கிராமத்தை சேர்ந்த இளம் பெண்கள் உதவி செய்தனர்.