பாரா மெடிக்கல் படிப்பு ஓரிரு நாளில் விண்ணப்பம்
'மருத்துவம் சார்ந்த, 'பாரா மெடிக்கல்' படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் குறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளுக்கு இணையாக, பாரா மெடிக்கல் எனப்படும், துணை மருத்துவ படிப்புகளுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. இதில், பி.பார்ம்., - பி.எஸ்சி., பட்டப்படிப்புகளில், 'நர்சிங், பிசியோதெரபி, ரேடியாலஜி, ஸ்பீச் ஆடியோலஜி, லாங்குவேஜ் பெத்தாலஜி, ரேடியோ தெரபி, ஆக்குபேஷன் தெரபி' உள்ளிட்ட, ஒன்பது விதமான பாடத்திட்டங்கள் உள்ளன. தமிழகத்தில், ஐந்து அரசு மருத்துவக் கல்லுாரிகள்; 150 சுயநிதி கல்லுாரிகளில், துணை மருத்துவ படிப்புகளுக்கு, 8,000 இடங்கள் உள்ளன. படித்து முடித்ததும் உடனடியாக வேலை கிடைக்கும் என்பதால், பிளஸ் 2 முடித்த, அறிவியல் பிரிவு மாணவர்களின் முக்கிய தேர்வாக, இது உள்ளது. வழக்கமாக, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., முதற்கட்ட கலந்தாய்வு முடிந்ததும், இதற்கான விண்ணப்ப வினியோகம் துவங்கும். முதற்கட்ட கலந்தாய்வு, ஜூன், 25ல் முடிந்தும், இதற்கான விண்ணப்ப வினியோகம் துவங்கவில்லை.
இதுகுறித்து, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜ் கூறுகையில், ''இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த விவரங்கள், அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. ஓரிரு நாளில், விண்ணப்ப வினியோகம் குறித்த முறையான அறிவிப்பு வெளியாகும்; ஆகஸ்ட் மாதத்தில் கலந்தாய்வு நடத்தப்படும்,'' என்றார்.