மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருப்பதியில் தூய்மைப் பணிகள்: மத்திய அரசு திட்டம்
மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருப்பதி, தாஜ்மஹால் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற 10 இடங்களை "தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் முதல்கட்டமாகத் தூய்மைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய குடிநீர் வழங்கல் மற்றும் துப்புரவுத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியதாவது:
"தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் பிரசித்தி பெற்ற 100 இடங்களைத் தூய்மைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதில் முதல்கட்டமாக ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால், ஜம்முவில் உள்ள வைஷ்ணவி தேவி ஆலயம், மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருமலை திருப்பதி ஆலயம், உத்தரப் பிரதேசத்தில் உள்ள மணிகர்ணிகா கங்கை படித்துறை, அஸ்ஸாம் காமாக்யா கோயில், பஞ்சாபில் அமைந்துள்ள பொற்கோயில், ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் ஷெரீஃப் தர்கா, ஒடிஸா மாநிலம் புரியில் உள்ள ஜெகந்நாதர் கோயில், மகாராஷ்டிரத்தில் உள்ள சத்ரபதி சிவாஜி ரயில் முனையம் ஆகிய இடங்களைத் தூய்மைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. உலக வங்கியைச் சேர்ந்த நிபுணர்களின் ஆதரவுடன் முன்னோடி சோதனைத் திட்டமாக இந்த முயற்சி செயல்படுத்தப்படவுள்ளது.
இந்த 10 பிரசித்தி பெற்ற இடங்களைத் தூய்மையாக்கும் பணிகள் நிறைவடைந்த பிறகு மீதமுள்ள 90 இடங்கள் தூய்மைப்படுத்தப்படும் என்றார் அவர்.