சூரிய மின்சக்தி, சைக்கிள் பயணம்: சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வலியுறுத்தல்
சூரிய மின்சக்தி, சைக்கிள் பயணம், எரிசக்தி சேமிப்பு என்ற மூன்று அம்சத் திட்டத்தை நாம் பின்பற்ற வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே தெரிவித்தார்.
நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வரும் ஒரு சில எம்.பி.க்களில் தவேவும் ஒருவராவார். அண்மையில் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது அவர் சுற்றுச்சூழல் துறையின் இணையமைச்சராக (தனிப்பொறுப்பு) நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் அவர் பேசியதாவது:
குறைந்த தொலைவே உள்ள இடங்களுக்கு சைக்கிள் ஓட்டிச் செல்வதுதான் சிறந்த போக்குவரத்து வழிமுறையாகும். மேலும் சைக்கிள் ஓட்டுவதால் கூடுதலாக நமது ஆரோக்கியத்துக்கும் நன்மை விளையும். சூரிய மின்சக்தி, சைக்கிள் பயணம், எரிசக்தி சேமிப்பு என்ற மூன்று அம்சத் திட்டத்தை நாம் பின்பற்ற வேண்டும்.
தூய்மையான, பசுமையான (சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத) எரிசக்தியை உற்பத்தி செய்வதும், எரிசக்தியைப் பாதுகாக்க வேண்டியதும் அவசியம். சூரிய மின்சக்திதான் எதிர்காலத்தில் நமக்கு பெரிதும் பயன்படப் போகும் எரிசக்தியாகும். அது தொடர்பாக ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். ஏனெனில், எரிசக்தித் துறையையே சூரிய மின்சக்திதான் புரட்சிகரமாக மாற்றப் போகிறது.
எரிசக்தி பயன்பாட்டில் அலட்சியம் கூடாது. ஏனெனில் சேமிக்கப்படும் எரிசக்தியானது எரிசக்தியை உற்பத்தி செய்வதற்குச் சமமாகும். எரிசக்தியைச் சேமிப்பதில் தனிநபர்கள் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்றார் அமைச்சர் அனில் மாதவ் தவே.