நிதியாண்டை மாற்ற திட்டம்; பரிசீலனை குழு அமைப்பு
இந்தியாவில், ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான காலம், நிதியாண்டாக கடைபிடிக்கப்படுகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில், ஜன., - டிச., வரையிலான காலண்டர் ஆண்டு, நிதியாண்டாக உள்ளது. அந்த நடைமுறையை இந்தியாவிலும் பின்பற்றுவது குறித்து ஆராய, மத்திய நிதியமைச்சகத்தின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் சங்கர் ஆச்சார்யா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, நிதியாண்டை மாற்றுவதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்த அறிக்கையை, வரும், டிச., 31க்குள் அரசுக்கு அறிக்கை அளிக்கும்.
இந்தியாவில், 1867ல், ஏப்., - மார்ச் வரையிலான நிதியாண்டு முறை அறிமுகமானது. இதை, 'ஜன., - டிச., ஆக மாற்ற வேண்டும்' என, 1984ல், எல்.கே.ஜா குழு, அறிக்கை அளித்தது. பருவமழையை பொறுத்து, ஜன., - டிச., மாதங்களில் நடைபெறும் நடவு மற்றும் அறுவடை பணிகளை மதிப்பிடவும், அதன் அடிப்படையில் நிதிக் கொள்கைகளை வகுக்கவும் காலண்டர் ஆண்டு கணக்கீடு சிறந்ததாக கருதப்படுகிறது.