போர் ஒத்திகையில் வென்ற செயற்கை நுண்ணறிவு
ராஸ்ப்பெர்ரி பை என்ற தம்மாத்துண்டு கணினி, 3,500 ரூபாய்க்கு, 2012ல் அறிமுகமானபோது அது இத்தனை பெரிய சாதனையை படைக்கும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால், அமெரிக்காவிலுள்ள சின்சினாட்டி பல்கலைக்கழக ஆய்வாளர் நிக் எர்னஸ்ட் அதே சிறிய கணினியில், 'ஆல்பா' என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருளை செலுத்தி, அதற்கு போர் விமானங்களை செலுத்தும் திறனை தந்தார். ஆல்பாவின் திறனை சோதிக்க, அமெரிக்க விமானப் படையின் கர்னல் ஜீன் லீ என்பவரை அழைத்தனர் விஞ்ஞானிகள். ஒரு அறைக்குள், 'பிளைட் சிமுலேட்டர்' என்ற ஒரு சாதனத்தில் அமர்ந்து போர் விமான கருவிகளை ஜீன் லீ இயக்கினார். ஆல்பா மென்பொருளும் வேறு ஒரு விமான சாதனத்தை இயக்கி அவருடன், 'ஆகாயப் போர்' புரிந்தது. அனுபவமிக்க விமானப் படை கர்னலான லீயின் பல விமான சண்டை உத்திகளையும், ஆல்பா என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருள் முறியடித்து வெற்றி பெற்றது. “ஆல்பாவின் போர் உத்திகள் சாதுரியமானவையாக, மூர்க்கத்தனமானவையாக, வேகமானவையாக இருந்தது,” என்று லீ ஒப்புக்கொண்டார். தனக்கு சில மணி நேரத்தில் சோர்வும், தளர்ச்சியும் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். ஆனால், ஆல்பா ஒரு மென்பொருள் என்பதால் அதற்கு அதெல்லாம் எதுவும் கிடையாது. இப்போது ஆல்பாவை மேலும் மேம்படுத்த தனி நிறுவனத்தை துவங்கியிருக்கிறார் நிக் எர்னஸ்ட்.