கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
கல்கி அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளையினர் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: படிப்பில் சிறந்து விளங்கி, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு கல்கி அறக்கட்டளை ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு அறக்கட்டளையின் வெள்ளி விழா ஆண்டு என்பதால் ஆண்டுதோறும் வழங்கப்படும் ரூ.5 லட்சம் உதவித் தொகையுடன் ரூ.50 ஆயிரம் கூடுதலாக வழங்கப்படுகிறது.
இதில் மனவளர்ச்சி பாதிப்புடைய சிறப்பு கல்விப் பயிற்சி பெறும் மாணவர்கள் 5 பேருக்கு தலா ரூ 5 ஆயிரம் வீதம் ரூ.25 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அமரர் கல்கி மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த துறைகளான பத்திரிகை துறை, திரைப்படத் துறை, சாஸ்திரிய சங்கீதம் அல்லது நடனம் பயிலும் மாணவர்கள் 10 பேருக்கு தலா ரூ. 5,000 வழங்கப்படும்.
மீதமுள்ள தொகை பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு தலா ரூ.7,500-ம், பட்டப்படிப்பு மாணவர்களுக்கு தலா ரூ.4,000, பாலி டெக்னிக் அல்லது பிளஸ் 2 மாணவர்களுக்கு தலா ரூ.2,500 வீதம் வழங்கப்படும். இந்த உதவித் தொகையை பெற விரும்பும் மாணவர்கள் விண்ணப்பித்தல் பற்றி முழு விவரங்கள் அறிய ரூ.5 தபால் தலை ஒட்டிய சுய விலாசம் எழுதப்பட்ட உறை ஒன்றினை ஜூலை 15-ம் தேதிக்குள் அறக்கட்டளைக்கு கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி: நிர்வாக அறங்காவலர், கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை, புதிய எண் 14, நான்காவது பிரதான சாலை, கஸ்தூர்பா நகர், அடையாறு, சென்னை 20 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.