ஏழை மாணவர்கள் வெளிநாட்டில் ஒரு பருவம் படிக்கும் திட்டம்: நிகழாண்டிலும் நடைமுறைக்கு வருமா?
அரசுக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் வெளிநாட்டில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகத்தில் ஒரு பருவம் படிக்கும் திட்டம், நிகழாண்டில் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
2013-14ஆம் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் இந்த திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்கும் மாணவர் 6 மாதங்கள் வெளிநாடுகளில் படிக்க முடியும்.
இதன்படி, ஒரு மாணவருக்கு ரூ. 15 லட்சத்தை தமிழக அரசு செலவு செய்கிறது. ஆண்டுக்கு 25 முதுநிலை பட்ட மாணவர்கள், 5 பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அனுப்பப்படுவர்.
வெளிநாட்டில் கற்பித்தல் நடைமுறையின் கீழ் கல்வி கற்றல், கலந்துரையாடல், கலை, கலாசாரங்களை அறிந்து பரந்துபட்ட அறிவைப் பெறுதல் உள்ளிட்டவற்றால் மாணவர்களிடையே தன்னம்பிக்கை பெருகுகிறது. இதேபோல், பேராசிரியர்களுக்கும் ஆராய்ச்சி அறிவை மேம்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கிறது.
கடந்த 3 ஆண்டுகளாக 74 மாணவர்கள், 15 பேராசிரியர்கள் பயனடைந்துள்ளனர். விமானத்தில் பயணிப்போமா என்று கனவிலும் நினைத்துப் பார்க்காத ஏழை மாணவர்களுக்கு, அங்கு சென்று படிப்பதும் சாத்தியமாகியது.
இதற்கான பணியை தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் மே மாதத்திலேயே தொடங்கிவிடும். கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்புவது, தேர்வு நடத்தி மாணவர்களைத் தேர்வு செய்வது, பின்னர் பிரிட்டிஷ் கவுன்சிலில் ஒரு வாரப் பயிற்சி, பின்னர் தகுதித் தேர்வு என நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு, தேர்வு செய்யப்படுவோர் ஆகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டுக்கு அனுப்பப்படுவர்.
நிகழாண்டில் ஜூலை மாதம் தொடங்கிவிட்ட நிலையில், இதற்கான ஆரம்பக் கட்ட பணி இதுவரை தொடங்கவில்லை. எனவே, இந்தத் திட்டம் 2016-17ஆம் கல்வியாண்டில் செயல்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து பேராசிரியர்கள் கூறியது:-
சட்டப் பேரவைத் தேர்தல் மே மாதத்தில் நடைபெற்றதால், அப்போது பணி தொடங்கப்படவில்லை. உயர்கல்வி மன்றத்துக்கு கடந்த 3 ஆண்டுகளாகத் துணைத் தலைவர் இல்லாததும், 6 மாதங்களாக உறுப்பினர்- செயலர் பதவி நிரப்பப்படாததுமே காரணம்.
இவற்றில் பொறுப்பு அதிகாரிகளே நியமிக்கப்பட்டுள்ளதால், முழு கவனம் செலுத்த முடியாமல் போகிறது.
உயர்கல்வி மேம்பாட்டிலும், உயர்கல்வியில் ஒட்டுமொத்த சேர்க்கை விகிதத்திலும் (ஜிஇஆர்) முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
கேரளம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களின் உயர்கல்வி அதிகாரிகள் தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்திடம் ஆலோசனைகளைப் பெற்றுச் செல்கின்றனர். இங்கு பணியிடங்கள் காலியாக இருப்பதால், திட்டப் பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது என்றனர்.