முன்னுதாரணமான மாற்றுத் திறனாளி ரவி
மாற்றுத் திறனாளிகளுக்கு முன்மாதிரியாக விளங்கும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரின் முயற்சி காரணமாக, தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டண விலக்குக்கான அரசாணை பெறப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள பாலூரைச் சேர்ந்த தேசிகன் மகன் ரவி (45). இரண்டரை வயதில் போலியோ பாதிப்பால் இவரது இருகால்களிலும் ஊனம் ஏற்பட்டது. ஊனத்தைப் பற்றி கவலை கொள்ளாமல் எம்பிஏ படித்த இவர், கடந்த 2009-ஆம் ஆண்டுமுதல், ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் கிருஷ்ணகிரி கிளையில் முதுநிலை உதவியாளராகப் பணியாற்றி வருகிறார்.
நாடு முழுவதிலும் உள்ள 8 லட்சம் மாற்றுத் திறனாளிகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சமாகும். மற்றவர்களைப் போல ஓடியாடி வேலை செய்ய முடியாது என்ற தாழ்வு மனப்பான்மையால் வீட்டில் மாற்றுத் திறனாளிகள் பலர் முடங்கிக் கிடக்கின்றனர். ஆனால் மற்றவர்கள் போலில்லாமல் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் இவருக்கு ஏற்பட்டது.
அதன் பயனாக, இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களை ஓட்டக் கற்றுக்கொண்ட ரவி, கடந்த 2012-ஆம் ஆண்டு ஓட்டுநர் உரிமம் பெற்றார். தொடர்ந்து சென்னை, கோவையில் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாகன மையங்களில், மாற்றுத் திறனாளிகள் பயனடையும் வகையில் வாகனத்தை வடிவமைத்தால் சாலை வரி விலக்கு கிடைக்கும் என்பதை அறிந்து, அதன்படி வாகனத்தை வடிவமைத்து காரை ஓட்டி வருகிறார்.
சாலை விதிகளை முறையாகக் கடைப்பிடித்து, பதற்றமின்றி கார் ஓட்டும் ரவி, மாற்றுத் திறனாளிகளிடம் ஏற்படுத்திய விழிப்புணர்வின் காரணமாக தமிழகத்தில் தற்போது சுமார் 2,000 பேர் ஓட்டுநர் உரிமம் பெற்று காரில் வலம் வருகின்றனர். நாடு முழுவதிலும் உள்ள மாற்றுத் திறனாளிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், மதிப்புக் கூட்டப்பட்ட கார்களுக்கான சுங்க வரி விலக்குக் கோரி கடந்த ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு தனியொருவராக ரவி கார் ஓட்டிச் சென்றார். அந்த நிகழ்வை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து ரவி மேற்கொண்ட முயற்சியின் பலனாக, நாடு முழுவதிலும் சுங்கச் சாவடிகளில் மாற்றுத் திறனாளிகளின் வாகனங்களுக்கு சுங்கக் கட்டண விலக்கு அளித்து மத்திய அரசு கடந்த ஜூன் 8-ஆம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து மாற்றுத் திறனாளிகளுக்கு முன்மாதிரியாக விளங்கும் தே.ரவி கூறியது:
மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் அனைத்து வகையான வாகனங்களுக்கும் 50 சதவீத காப்பீடு (இன்சூரன்ஸ்) விலக்கு உள்ளது. இதனை 75 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்.
மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வாகனத்தை மற்ற ஓட்டுநர்கள் தெரிந்துகொள்ள ஏதுவாக வாகனங்களின் மேல்புறம் நீலநிற விளக்கு பொருத்த வேண்டும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்பட 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையிலிருந்து தனியாகவே புதுதில்லி வரை காரில் சென்று பிரதமரைச் சந்தித்து மனு அளிக்க முடிவு செய்துள்ளேன்.
மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டண விலக்கு அளித்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.