20 மாணவ –மாணவிகளுக்கு ரூ.2 லட்சம் உதவித் தொகை: சூர்யா வழங்கினார்
இந்த ஆண்டுக்கான, ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யின் 37-ஆம் ஆண்டு விழா, 12-06-2016 காலை வடபழனி பிரசாத் அரங்கத்தில் சிறப்பாக நடைப்பெற்றது. விழாவில் 20 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ 2 லட்சம் பரிசளிக்கப்பட்டது. அதை நடிகர் சூர்யா வழங்கி வாழ்த்தினார்.
மாணவர்கள் மத்தியில், ‘தொடக்கவுரை’ நிகழ்த்திய நடிகர் கார்த்தி, “இது எங்கள் குடும்ப விழா”. ‘நல்ல செயல்களை செய்’ என்று அப்பாவும் அம்மாவும் அறிவுரை மட்டும் கூறாமல், எப்படி நல்ல காரியங்களில் ஈடுபட வேண்டும் என்பதையும் எங்கள் கண் முன்னால் செய்து காட்டினார்கள். ஒவ்வொரு வருடமும் எங்கள் வீட்டு நிகழ்ச்சியாகவே ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’ நிகழ்ச்சி நடக்கும். பரிசு பெற்ற மாணவர்கள் நன்றாக படிப்பவர்கள். அவர்களிடம் ‘ நல்லா படிங்க’ என்று சொல்வதைவிட, படித்த படிப்பை சமூகத்திற்கு பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறினார் .
நிகழ்ச்சியில் பேசிய சிவகுமார், கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்கள் படிக்க எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். கல்வி ஒருவரின் வாழ்க்கைத் தரத்தைஎந்தளவு உயர்த்தும் என்பதனையும் நான் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். என்னைப் போல ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து நன்றாகப் படிக்கிற பிள்ளைகளுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்வதில் மிகுந்த மனநிறைவு அடைகிறேன். தடைகளைத் தாண்டி பெற்ற முதல் வெற்றி இது. இன்னும் போக வேண்டிய பயணம் வெகுதூரம் உள்ளது. மாணவர்கள் தங்களுடைய கவனம் சிதறாமல், தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.” என்று கூறினார்.
‘‘அப்பா சிவகுமார் செய்த பணிகளிலிருந்து சில மடங்காவது அதிகமாக செய்தால் அது வளர்ச்சி. அகரம் பவுன்டேஷன் நம் சமூகத்தில் இருக்கும் அடித்தட்டு மக்களின் கல்வி வளர்ச்சிக்கு தன்னால் முடிந்த பணிகளைச் செய்து வருகிறது. 1300 – க்கும் அதிகமான மாணவர்களின் கல்லூரி கனவை, பல நல்ல உள்ளம் கொண்டவர்களின் உதவியோடு நனவாக்கி இருக்கிறோம். சமூகத்திற்குத் தேவையான பல்வேறு சவால்கள் இருந்தாலும், கல்வி அதில் மிக முக்கியமான ஒன்று. உணவு, உடை, இருப்பிடம் ஆகிய மூன்று அடிப்படைத் தேவைகளோடு கல்வியும் சேர்ந்து விட்ட ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். கடந்த ஆண்டு முதல் தை திட்டத்தின் மூலம் படிப்புக்கு மட்டுமின்றி தொழிற்கல்விக்கு முன்னுரிமை தரும் வகையில் பள்ளி கல்வியை இடைநின்ற மாணவர்களுக்கு பல்வேறு தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்போடு 40 மாணவர்களுக்கு தொழிற்கல்வி பயிற்சி அளிக்கிறோம்’’ என்றார் சூர்யா.
‘‘நாம் செய்கிற ஒவ்வொரு நல்ல காரியமும், ஒரு விளக்கு கொண்டு இன்னொரு விளக்கை ஏற்றும் முயற்சி. இங்கே சிறப்பு செய்யப்பட்ட மாணவர்கள் தங்களால் முடிந்த நல்ல காரியங்களில் கல்வி கற்கும் காலத்தில் இருந்தே ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’’ என்றும் கூறினார் சூர்யா.
சிவக்குமாரின் மகள் பிருந்தா சிவகுமார், இறைவணக்கம் பாடினார். பரிசு பெற்ற மாணவர்கள் ஏற்புரை வழங்க, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் அகரம் முன்னாள் மாணவி ஹேமா. இறுதியாக வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.