உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் தமிழக அரசின் ஒதுக்கீடுகள் ரத்து- சுப்ரீம் கோர்ட்
உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் தமிழக அரசின் ஒதுக்கீடுகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இத்தகைய படிப்புகளில் அகில இந்திய அளவில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 189 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், அரசு மருத்துவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
ஆனால் எம்பிபிஎஸ் படிப்புகளில் இருப்பது போல அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு என சிறப்பு மருத்துவ படிப்புகளில் இடங்கள் எதுவும் இல்லை. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் மாநில அரசின் ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்பட்டு அகில இந்திய அளவிலான சேர்க்கை மட்டும் நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இதனால் இனி உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களுக்கு வெளி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும் விண்ணபிப்பர். இது தமிழக மாணவர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.