இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட சக்தி வாய்ந்த தேஜாஸ் போர் விமானம், விமானப்படையில் சேர்ப்பு!
முற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இலகுரக போர் விமானமான தேஜாஸ் போர் விமானம் இன்று இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. பெங்களூரிலுள்ள விமான சிஸ்டம் சோதனை நிறுவனத்தில் வைத்து நடைபெற்ற எளிய விழாவில் முறைப்படி விமானப்படையிடம் தேஜாஸ் ஒப்படைக்கப்பட்டது. விமானி ரங்காச்சாரி இதை முதன் முதலாக இயக்கினார். பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர். எஸ்.கிரிஸ்டோபர், ஹெச்.ஏ.எல் தலைவர் டி.எஸ்.ராஜு, ஏ.டி.ஏ தலைவர் சி.டி.பாலாஜி மற்றும் தேஜாஸ் திட்ட இயக்குநர் ஏர் மார்ஷல் ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் முன்னாள் தலைவர் டாக்டர். வி.கே.ஆத்ரே, கூறுகையில், "தேஜாஸ் சிறந்த விமானம். பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது. இந்தியாவின் வருங்கால விமானப்படை வளர்ச்சிக்கு இது ஒரு முக்கிய மைல் கல்" என்றார். இந்த விமானம் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் கூட்டு முயற்சியில் உருவான ஜெஎப் - 17 ரக போர் விமானத்தைவிட அதிக சக்தி வாய்ந்ததாகும். ஆகாயத்தில் பறந்துகொண்டிருக்கும் போதே மற்ற விமானங்களின் மீது துல்லியமாக தாக்குதல் நடத்தும் திறமை கொண்டது தேஜாஸ் போர் விமானம். தற்போது, பயன்படுத்தப்பட்டுவரும் மிக் 21 ரக போர் விமானங்களுக்கு மாற்றாக இது அமைந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுபோன்ற மேலும் 6 போர் விமானங்களையும், அடுத்த ஆண்டில் 8 விமானங்களையும் தயாரித்து வழங்க இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் திட்டமிட்டுள்ளது.