தமிழகம் முழுவதும் ரூ.1.5 கோடி செலவில் 18 மாசு கட்டுப்பாடு அலுவலகங்களில் சூரிய ஒளி மின்சார திட்டம்
தமிழகம் முழுவதும் உள்ள 18 மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகங்களில் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிலவும் மின்பற்றாக் குறையைப் போக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக `தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை - 2012’-ஐ தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, அடுத்த 3 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 1000 மெகாவாட் வீதம் 3 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க வேண்டும்.
இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதிலும் உள்ள 18 மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகங்களில் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆண்டுக்கு 300 நாட்கள் தெளிவான சூரிய ஒளி கிடைத்து வருகிறது. சூரிய ஒளி மின்சாரத்தை உருவாக்க தென் தமிழக பகுதிகள் நாட்டிலேயே மிகவும் பொருத்தமான இடங்களாக திகழ்கின்றன. இதைக் கருத்தில் கொண்டும் சூரிய மின்சக்தி உற்பத்தியை ஊக்குவிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதிக அளவு மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்கள் குறிப்பிட்ட அளவு சூரிய மின் சக்தியை பயன்படுத்த வேண்டும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட உயர் அழுத்த மின் இணைப்புகளை பயன்படுத்துவோர் மற்றும் வர்த்தக மின் இணைப்பு பெற்றிருப்போர் தாங்கள் பயன்படுத்தும் மின்சாரத்தில் 6 சதவீதத்தை சூரிய சக்தியில் இருந்து பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழகத்தில் புதிதாகக் கட்டப்படும் அனைத்து அரசு கட்டிடங்கள், உள்ளாட்சி நிறுவன கட்டிடங்களில், சூரிய சக்தி மேற்கூரை சாதனங்கள் நிறுவுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள அரசு கட்டிடங்களில் சூரிய ஒளி சாதனங்களை படிப்படியாக நிறுவவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் உள்ள 18 மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகங்களில் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க முடிவாகியுள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 193 கிலோவாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கப்படும். ஒரு கிலோவாட் என்பது ஆயிரத்து 500 யூனிட் மின்சாரம் ஆகும். தற்போது அரசு அலுவலகங்களில் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ.8 கட்டணமாக செலுத்தப்படுகிறது. சூரிய ஒளி மூலம் 1 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டாலே ஆண்டொன்றுக்கு ரூ.12 ஆயிரம் மிச்சமாகும்.