ஏப்ரல் 1-ந்தேதி முதல் செயல்படாத இ.பி.எப். சந்தாதாரருக்கும் வட்டி
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (EPF) தொடர்ந்து 36 மாதங்கள் மாத சந்தா செலுத்தாமல் அப்படியே விட்டு விட்டால், அந்த கணக்கு செயல்படாத இ.பி.எப். கணக்கு என்று அழைக்கப்படுகிறது.
இப்படிப்பட்ட கணக்குகளில் ரூ.32 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக சந்தா தொகை சேர்ந்துள்ளது.
இந்த செயல்படாத கணக்குகளுக்கு வட்டி தருவதை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரியம் 2011-ம் ஆண்டு, ஏப்ரல் 1-ந்தேதி முதல் நிறுத்தி விட்டது.
இந்த நிலையில், மறுபடியும் இத்தகைய செயல்படாத இ.பி.எப். கணக்குகளுக்கு வரும் ஏப்ரல் 1-ந்தேதி முதல் வட்டி வழங்க வருங்கால வைப்பு நிதி வாரியம் முடிவு செய்து அறிவித்துள்ளது.
டெல்லியில் நடந்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரிய கூட்டத்துக்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா, “செயல்படாத இ.பி.எப். கணக்குகளிலும் வட்டி செலுத்த முடிவு செய்துள்ளதால், இனி செயல்படாத இ.பி.எப். கணக்கு என்ற ஒன்று இருக்காது” என கூறினார்.
இதன்மூலம் 9 கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் பலன் அடைவார்கள்.