பள்ளிகளில் சிசிடிவி கேமிராக்களை பொருத்த நிதி வழங்கும் எந்த திட்டமும் இல்லை: மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி
பள்ளிகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் நிதியை வழங்கும் எந்த திட்டமும் இல்லை என்று மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் இது குறித்து பேசிய மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி கூறுகையில், “ பள்ளிகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தும் விவகாரம் மாநில அரசுகளின் முடிவுக்குட்பட்டது. இதற்காக மத்திய நிதியை வழங்கும் எந்த திட்டமும் இல்லை தனது அமைச்சகத்திடம் இல்லை” என்று தெரிவித்தார்.பள்ளிக்குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி கேமிராக்களை பொருத்த மத்திய அரசு திட்டத்தை முன்வைத்துள்ளதா? என்று கேள்வி எழுப்பட்ட போது, பள்ளிகள் பொதுப்பட்டியலில் உள்ளது எனவும், பெரும்பாலான பள்ளிகள் மாநில அரசுகளின் அதிகார வரம்புக்குள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், மும்பை உயர் நீதிமன்றம் அண்மையில் விசாரணையின் போது, பள்ளிகளில் சிசிடிவி கேமிராக்களை பொருத்துவது பற்றி பரீசிலனை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தது எனவும், கேந்திரிய வித்யாலயா, மற்றும் நவோத்யா வித்யாலயா பள்ளிகளில் சிசிடிவி கேமிராக்களை பொருத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.