தெலுங்கு மாணவர்கள் தாய்மொழியில் தேர்வை எழுத வேண்டும்: தெலுங்கு யுவ சக்தி கடிதம்
தெலுங்கு மாணவர்கள் தாய்மொழியில் தேர்வை எழுத அனுமதிக்க வேண்டும் என்று கூறி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தமிழ்நாடு தெலுங்கு யுவ சக்தி தலைவர் ஜெகதீஸ்வரரெட்டி கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து கே.ஜெகதீஸ்வரரெட்டி ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு இன மக்களின் நல்வாழ்வு, முன்னேற்றம், வளர்ச்சிக்காக எங்களது இயக்கம் கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
தெலுங்கு மக்களின் பல்வேறு கோரிக்கை தொடர்பாக கடந்த 2012 ஆம் ஆண்டு உங்களை நேரில் சந்தித்து பேசினேன். அப்போது 2006 ஆம் ஆண்டு தமிழக அரசு தமிழ்நாட்டில் வாழும்
அனைத்து இன மக்களும் தமிழில் கட்டாயமாக படிக்க வேண்டும் என்று கொண்டு வரப்பட்ட சட்டம் குறித்து தங்களிடம் விளக்கினேன்.
அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக தாங்கள் உறுதி அளித்தீர்கள். மேலும் தமிழ்நாட்டில் தெலுங்கு அகாடமி ஆரம்பிக்கவும் சம்மதம் தெரிவித்தீர்கள். ஆந்திர பவனம் கட்ட பள்ளிக்கரணையில் 2½ கிரவுண்டு நிலமும் ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தீர்கள். தெலுங்கு மக்கள் என்றுமே உங்கள் மீது அன்புமிக்கவர்கள்.
தற்போது தமிழ்நாடு பள்ளி–கல்வி துறை கிருஷ்ணகிரி, ஓசூர், வேலூர், திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை பகுதிகளில் படிக்கும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மாணவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வை தமிழில்தான் எழுத வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளது. இது அம்மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நானும், பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களும் வழக்கு தொடர்ந்தோம். அதன்படி 2016 ல் மட்டும் மாணவர்கள் அவர்களது தாய் மொழியில் தேர்வு எழுதலாம் என்று ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.
ஆனால் பள்ளி கல்வி துறை இயக்குனர் தெலுங்கு மற்றும் கன்னட மாணவர்கள் இந்த ஆண்டு நடைபெறும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழிலேயே கட்டாயம் எழுத வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
2006 ல் திமுக ஆட்சியின் போது பிற மொழி மாணவர்கள் தமிழை கட்டாய பாடமாக படிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்து 8 ஆண்டுகள் ஆகிய பின்னரே ஆசிரியர்களை அரசு நியமித்தது.
கடந்த 2012 ல் தான் தமிழ் ஆசிரியர்களை அரசு நியமனம் செய்தது. தற்போது 10 ஆம் வகுப்பு படிக்கும் பிற மொழி மாணவர்களுக்கு தமிழ் மொழியில் எழுத படிக்க ஓரளவே தெரியும் என்ற நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்வை தமிழில் எழுத வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது வேதனைக்குரியது.
இதன் மூலம் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற முடியாது என்பதுடன் அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே 10 ஆம் வகுப்பு தேர்வு எழுத உள்ள தெலுங்கு மாணவர்கள் இந்த ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்வை அவர்களது தாய் மொழியிலேயே எழுத தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீங்கள்தான் என்றைக்கும் தெலுங்கு மக்களின் நம்பிக்கை நட்சத்திரம். உங்கள் மீது நாங்கள் வைத்திருக்கும் அன்பு பாசம் என்றும் நீடித்து நிலைத்திருக்கும்.
தெலுங்கு மக்கள் தமிழை கற்றுக்கொள்ள மிகுந்த ஆர்வமிக்கவர்களாக உள்ளனர். தமிழை எங்கள் சகோதர மொழியாக பாவிக்கிறோம்.
தெலுங்கு மற்றும் பிறமொழி மாணவர்கள் மற்றும் மக்களின் மனம் குளிரும் வண்ணம் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை அவரவர் தாய் மொழியில் இந்த ஆண்டு எழுதலாம் என்று நீங்கள் ஆணையிட வேண்டும்.
பிப்ரவரி 24 ஆம் தேதி தங்களது பிறந்தநாள் பரிசாக தெலுங்கு மற்றும் பிறமொழி மாணவர்கள் அவர்களது தாய் மொழியில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வை எழுத பள்ளி கல்வி துறை இயக்குனருக்கு தாங்கள் ஆணையிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.